Wednesday, April 29, 2009

நீ வருவாய் என...
என்னவளே என்னில் கரைந்தவளே
உன் வருகைக்காக ஏங்கும்
என் ஒவ்வொரு இதயத்துடிப்பும்...

லட்சங்களில் நான்
சம்பாதித்தபோதும்
எனது வாழ்வின் லட்சியம் நீ
வாழ்வின் செழுமைக்காக இளமையை
தொலைத்துவிட்ட பாவி நான்...

என் தேகத்தின்
ஒவ்வொரு செல்லும்
செய்யும் யாகத்தின் வரமடி நீ...

நான் கட்டிவைத்துள்ள
என் ஹார்மோன்களின் தவிப்பை
உன்னால் மட்டுமே
கட்டவிழ்த்துவிடமுடியும்...

காலப் பெருவெளியில்
பிரபஞ்சப் காரிருளில்
நாம் கரைந்திட்டே
கூடு விட்டு கூடு ஜீவன்
பாய்ந்திடதோன்றிடுதே...

கனவில் மட்டுமே கண்ட நம் மழலைக்கு
உயிரும் மெய்யும் தரப்போகும்
உன் வரவுக்காய் வழிமேல் விழியோடு
அது என் சாயலா இல்லை உன் சாயலா
என எண்ணி எண்ணி தவிப்போடு...

என் தேவதையே
இன்னமும் 10 நாட்களாம்
நாட்குறிப்பின் தாள்களை
வேகமாய் கிழித்து
உன் வரவின் நாளை
மேனிசிலிர்க்க பார்த்திருப்பேன்
உனக்காய் காத்திருப்பேன்...

மீண்டும் விகடன் ...


விகடனில் இது எனது 3 வது பதிவு
நன்றி நண்பர்களே தங்களின்
ஆதரவுக்கு
http://youthful.vikatan.com/youth/sakthipoem28042009.asp

Monday, April 27, 2009

அற்றை திங்கள் அந்நிலவில்....தலைவனை பற்றி தலைவி

அற்றைத் திங்களில் அள்ளியெடுத்து அணைத்தனன்
மோகனப் புன்சிரிப்பில் மூழ்கடித்தனன்
மந்தகாசப் பார்வையில் மனம் மயக்கினன்
சிருங்காரத்தில் சிந்தை மயங்கி சிலிர்த்தனன்
என்னில் அன்பை அகழ்ந்தெடுத்தனன்
ஏகாந்தத்தில் எனை இருத்தினன்....

கன்னம் கன்றி சிவக்க வைத்தனன்
அவ்வப்போது துயில் கலைத்தனன்
பெண்மையின் மென்மை உணர்த்தினன்
சிப்பிக்கு முத்துக்களை பரிசளித்தனன்
வார்தைகளில் ஜாலம் புரிந்தனன்
வாராமலே சில நாள் நோகடித்தனன்....


தலைவி பற்றி தலைவன்

நாணிச் சிரிக்கின்றாள்
வெட்கிக் குனிகின்றாள்
எண்ணி தவிக்கின்றாள்
தேனினும் இனிய தீஞ்சுவை
குரலில் அழைக்கின்றாள்....

நாடி வந்தால் ஓடி ஒளிகின்றாள்
நயன மொழி பேசுகின்றாள்
காதிலோ காதல் ஜதி சொல்கின்றாள்
பல நாழிகை பார்த்து ரசிக்கின்றாள்
பாராமல் நான் போனால் துடிக்கின்றாள்....

Sunday, April 26, 2009

ஆரம்பிச்சுட்டாங்கய்யா ஆரம்பிச்சுட்டாங்க....

இங்கே கட்சி கொடிகள்
மூலைக்கு மூலை ஆனால்
பாவம் தொண்டர்கள்
தான் இன்னமும் ஏழை...

அவசர அவசரமாய்
அலங்கரிக்கப்படும் சாலை
உற்சவர் மட்டுமல்ல
மூலவரும் உலா வரும் வேளை...

ஆணவக் குரங்கு
அலைக்கழித்தபோதும்
ஆப்பசைத்த குரங்காய் தேடியலைவர்
வாக்காளர்களை தேடியலைவர்...

இதோ இறுதிப்பட்டியல் வரும் வரை
இன்னமும் எத்தனை வேட்பாளர்
இதயம்
இடம் மாறப்போகின்றதோ...

நேற்று உண்ட உணவு
செரிக்கவில்லை போலும்
இன்று உண்ணாவிரதமாம்
வந்துவிட்டது ஓலை...

இங்கு இருப்பது

எழாத சூரியன்
செல்லரித்த இலை
நம்பிக்கை தராத கை
சேற்றில் இருக்கும் கமலம்...

சுத்தாத பம்பரம்
ஒலிக்காத முரசு
அழுகிப்போன பழம்
சீறாத சிறுத்தை.

பி.கு நல்லதா ஏதாவது கட்சியிருந்தா
சொல்லிட்டு போங்கய்யா
சொல்லிட்டு போங்க

Saturday, April 25, 2009

அவளோடான என் நாட்கள்.......

அவனும் அவளுமான
நாட்களின் டைரிக்குறிப்பை
நான் புரட்டியபோழ்து....

மூங்கில் காடுகளை
புல்லாங்குழலாய்
பூக்கச் செய்திருக்கின்றனர்...

வெண்ணிலவின்
வெட்கக்கரையை
வெண்மேகம் கொண்டு
துடைத்திருக்கின்றனர்....

மஞ்சு பொதிகளை மஞ்சமாக்கி
தலையனைகளை தடம் புரள செய்து
கட்டிலை கதறியழச்செய்த‌
காதல் களத்து கர்மவீரர்கள்....

மினுங்கும் நட்சத்திரத்து
சினுங்கொலியை
தங்கள் நகையொலியால்
வென்றிருக்கின்றனர்...

இவர்களை
காண அமாவாசையன்று
நிலவு எட்டிபார்த்தால்
அன்று பொளர்ணமியாகிவிட்டதாம்
அலட்டிக்கொள்கின்றார்கள்....

இதற்கு மேல் படிக்க
இயலாததால்
எழுந்துவந்துவிட்டேன்
போங்கபா.

Wednesday, April 22, 2009

மீண்டும் விகடனில்

http://youthful.vikatan.com/youth/sakthipoem220409.asp

Tuesday, April 21, 2009

உல்லாசமாய் உற்சாகமாய் !!!!!


பச்சை நிறப்புல்வெளியை
பாய்ந்தோடும் நதியை
இச்சைகளற்ற மனங்களை
இயற்கையின் வளங்களை
காணப் போகின்றேன்

மலையரசியின் மடியில்
மயக்கம் கொள்ள போகிறேன்
வளைவான பாதைகளில்
வளைந்தோடப் போகின்றேன்

கஸ்தூரி மஞ்சள் முகமும்
கள்ளமில்லா உளமும்
கனகாம்பரமும் சூடிய‌
கயல் பேசும்
காரிகைகளை காண போகின்றேன்

பூக்களின் சுவாசத்தை உணரவும்
என் உறவுகளின் நேசத்தை உணரவும்
ஒப்பனையற்ற அற்புத முகங்களை
நோக்கிப் பயணிக்க போகின்றேன்

எனக்காகவே
ஓடி ஓடி உழைக்கும் என்னவன்
அங்கு சிறிது ஓய்வு எடுக்கட்டும்
ஆடி பாடி என் மழலைகள்
அங்கு ஆனந்தத்தில் திளைக்கட்டும்

Saturday, April 18, 2009

ஜெயப்பேரிகை கொட்டட்டும்
இங்கு அரிசி ஒரு ருபாய்
குழம்பு 100 ரூபாய்
இலவசங்களுக்கு ஆசைப்பட்டால்
இதுவே விதியாய்

அட எதிரணியினரோ
டாஸ்மாக் அறிமுகம் செய்து
கஜானாவை நிரப்பும் கலையை
கற்றுத்தந்த கண்ணியவான்கள் இனி

மதங்களின் பேரால் மயக்கம் வேண்டாம்
இனங்களின் பேரில் இச்சை வேண்டாம்
ஜாதீய சங்கங்கள் வேண்டவே வேண்டாம்

ஊடகங்கள் இவர்கள் வசம் என்பதால்
உண்மைகள் மறைக்கப்படலாம்
ஊழலைக் களைய
உறுதி எடுப்போம் வாருங்கள்

மற்றவர்களின் மதிப்பீடுகளை களைந்தெறிந்து
இலக்கை நோக்கி திடமான
அடிஎடுத்து வையுங்கள்

என் இளையசமுதாயமே
தீட்டிய வாள் எங்கே
தினவெடுத்த தோள் எங்கே அட
தூங்கிக்கொண்டு இருக்கிறதா அங்கே???

நீங்கள் விழித்துகொள்ளுங்கள்
பிழைத்துகொள்ளுங்கள்
குறட்டை விட்டால்
"கோட்டையய்" விட்டுவிடுவீர்கள்

இளையவர்களே எழுக‌
ஜெயப்பேரிகை கொட்ட
வெற்றி உமைச் சேர
விடியல் எமைச் சேர
முதல் முதலாக என் பதிவு
விகடனில் நன்றி தோழர்களே...
http://youthful.vikatan.com/youth/sakthipoem17042009.asp

Friday, April 17, 2009

காரமான காரணங்கள் !!!!
உலகத்தின் எங்கோ
ஒர் மூலையில் இருக்கும் தோழர்களே
உள்ளத்தில் வலியுடன்
பகிர்கின்றேன் கேளுங்கள்
எங்கள் நாட்டில் பெண் சுதந்திரம் என்பது
பேச்சளவில் மட்டுமே

இன்றும் 16 வயதில்
பிள்ளை பெறும் இயந்திரங்களாகவே
பலரின் கண்களுக்கு இதைச் சொல்லவா


பசும்பொன் இல்லாததால் இன்றும்
30 வயதாகியும் "முதிர்கன்னியாய்"
பேதையாய் அவள் அதைச்சொல்லவா

இயற்கையின் வஞ்சனையில்
பிள்ளை பெறாவிட்டால்
மலடான சொற்களால் எங்கள்
மனதை இருகூறாக்குவர் "மலடி"என்பர்
இதைச் சொல்லவா

கொண்டவன் மூடனாயிருப்பின்
நடுரோட்டில் நாயை விட கேவலமாய்
மிதிபடுகின்றனறே அதைசொல்லவா


அவனே வேண்டாம் என விரட்டி விட்டால்
எங்கள் வாழ்க்கை வெட்டி "வாழாவெட்டி"
இதைச்சொல்லவா

அவன் இறைவனடி சேர்ந்தால் "கைம்பெண்ணாய்"
அடைமொழியுடன் வீட்டுச்சிறையில்
அதைச்சொல்லவா

எதைச்சொல்லசொல்கிறாய்
எங்களுக்கு பறக்கசொல்லிதந்து
சிறகை பறித்துகொள்கின்றிர்கள்
இதைவேறு சொல்லசொல்கின்றிர்கள்

புண்கள் புரையோடிபோன போன
சமூகத்தில் இருந்து போராளியாய் நான்
போராடிக்கொண்டு தான் இருக்கின்றேன்
நிழலில் அல்ல நிஜத்தில்

Tuesday, April 14, 2009

குவார்டரும் கோழி பிரியாணியும்


ஆரம்பித்துவிட்டது
ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை
நடக்கும் அரசியல் கேலிக்கூத்து

இனி வாக்குரிமை விலைப்பேசப்படும்
குவார்டர்க்கும் கோழி பிரியாணிக்கும்
கற்றை நோட்டுகளுக்கு
கள்ளவோட்டுக்கள் விற்கப்படும்

வீரம் விலைபோகும்
விவேகம் துணைக்கு வாராது
விலை படிந்துவிட்டது
வீரம் பேசியவர்க்கு

சிறுத்தைகளாய் சீறியவர்கள்
சிந்தனைகள் மழுங்கி
சில இறைச்சி துண்டுகளுக்காய்
தங்களை கூண்டுக்குள்
ஒளித்துகொள்ளுவார்கள்

தளர்ந்த வயதில்
தள்ளாமையுடன்
தலைமை இதுதான்
இன்றைய‌ திராவிடத்தின் நிலைமை

எங்கள் இனம் எங்கோ
அழிந்துகொண்டிருக்கும்
அதை பற்றி அவ‌ர்களுக்கு என்ன‌
அவ‌ர்களுக்கு தேவை
ஆட்சியும் அதிகாரமும் மட்டுமே

எங்கள் முதுகெலும்பு
முறிக்கப்படும்
இனி எங்களை
முளையில் கிள்ளிவைப்பர்
உணர்வுகளுக்கு கொள்ளி வைப்பர்

சிந்தியுங்கள் இளைஞர்களே
சிந்த்தியுங்கள்
நிலாவாய் இரவல் வெளிச்சம் இன்றி
ஆதவனாய் அம்ர்க்களமாய்

Sunday, April 12, 2009

கண்ணாமூச்சி ஏனடா ???
என் மனக்கரையோரத்தில்
நீ பதித்து சென்ற காலடித்தடங்கள்
என்ன கல்லில் பொறிக்கபட்டதா???
எத்தனை அலை வந்தாலும்
அழியவில்லையே!!!

அப்போதெல்லாம் உன் வார்த்தைக்கு
விளக்கம் தெரியாதவள்
இப்பொழுதெல்லாம் உன் மொளனத்திற்கு
விளக்கவுரை எழுதிகொண்டிருக்கிறேன்

இழந்துவிடுவேனோ என்ற பயத்தில்
இருக்கின்ற நொடிகளை
தொலைத்துவிட்டேனா????
தொலைத்ததை தேடினால்
நானும் தொலைவேனோ???

Thursday, April 9, 2009

அவள் தாயாக போகின்றாள்
அவள் தாயாகப் போகின்றாள்!
ஆம்!! அவள் தாயாகப் போகின்றாள்!

இன்றுவரையிலான அவர்கள் உலகத்தில்
இன்னும் இன்பம் சேர்க்கவரும் ஜீவனால்
இன்று ஒரு பொன்னாள்

அவன் காத்திருக்கிறான்
கண்ணீருடன் தங்கள்
காதல் சின்னத்தின் வருகைக்காய்

முதல் மூன்று மாதங்களில்
மசக்கையில் உடல் தளரிடும்
நடு மூன்று மாதங்களில்
சற்றே தேறிடும்
பின் மூன்று மாதங்களில்
வயிறும் மேடிடும்

மானுட உதிரம் நிறம்
மாறிக் கண்டிருக்கின்றீரா
இதோ இயற்கை இங்கு
இவள் உதிரத்தின் நிறம்
மாற்றிக் காத்துகொண்டிருக்கும்
அந்த பிஞ்சு பால் முகத்தின் வரவுக்காய்

பெற்றவளுக்கு மட்டுமே தெரியும்
பிரசவத்தின் வலி மற்றவர்க்கு
தெரியுமா என்ன‌???
அந்த வலியை விவரிக்க
வார்தைகள்தான் உண்டா வையத்தில்???

அகிலத்தை பொறுத்தவரை
அது ஒரு அறை
எங்களுக்கோ அது ஒரு களம்
ஜீவமரணப் போராட்டகளம்

சென்று வா மகளே
இந்த தாய்க்கு சேயாய்
உன் சேய்க்கு தாயாய்
வென்று வா!!!!!!

Tuesday, April 7, 2009

பெண்கள்
எத்தனை கோடி
இன்பம் வைத்தாய் இறைவா
எங்களுக்கு மட்டும் ஏன்
துன்பமும் சேர்த்துவைத்தாய்

நண்பர்கள் என்ற போர்வையில்
சிலர் நகைக்கின்றனர்
அங்கம் வருணித்து

இவர்களின் வார்தை தூண்டில்களும்
வக்கிரப்பார்வைகளும் இன்னும்
எத்தனை யுகங்களுக்கோ

சிகண்டிகளும் தப்புவதில்லை
சிறுமிகளும் தப்புவதில்லை
சிலரின் சில்லரைதனங்களிடமிருந்து

ஆடு மாடுகளிடம்
கற்பழிப்பு இல்லை
கருக்கழிப்பு இல்லை

ஐந்தறிவு ஜீவன் கூட‌
அத்துமீறுவதில்லை
ஆறறிவு மக்களோ
அதற்கும் கீழாய்

நாங்கள் மட்டும்
வலிகளுக்கும்
வேதனைகளுக்கும்
வடுக்களுக்கும்
சொந்தகாரிகளா????

அதிகாலை (சக்தி & சக்திகுமார் )

அதிகாலை நிலவை ஏமாற்றி
பூமியை ஆக்ரமித்த‌ நினைவில் குளிர்ந்து
பனி சின்னம் கொண்ட முகத்துடன்
சிவந்து எழுந்தான் நிலவின் காதலன்
நிசப்தமான காலையில்
அமைதியான யுத்தமோ
நித்திரையை தொலைத்து
பாடி திரியும் பறவைகள்
பாட முடியாவிட்டாலும்
காற்றில் ஆடும்
வண்ணத்துபூச்சிகள்
புது நாட்களை வரவேற்க பூக்கும் மலர்கள்
கானும் போதே கற்பனை விரியும்
என்னையும் தான்டி விண்னையும் தாண்டி
அழகான விடியலை கால் நூற்றாண்டாய்
காணாமல் விட்டேன்
நல்ல வேளை
நான் துருவத்தில் பிறக்கவில்லை
பிறந்திருந்தால் வருடத்திற்க்கு
ஒரு முறை தான் விடியல்
விடியலை கண்டவர்கே
வாழ்கையில் விடியல்
எனக்கும் இன்று தான் விடிந்தது

Saturday, April 4, 2009

இதயம் ரணமானது!!!!


திக்கற்ற வெளியில்
திசையறியாது

தவிக்கின்றேன் தோழி
திரும்பி பார்த்தால்

உற்றவள் நீயும் இல்லை
உறவினரும் இல்லை

கண்ணில் உன்னை வைத்தால்
கண்ணீருடன் கரைந்திடுவாய்

என எண்ணி உன்னை
என் இதயத்தில் அன்றோ இருத்தினேன்
என் இதயத்தின் ஓசை கேட்டு

இதமாய் நீ உணர்வாய் என
இன்று இதயமும் ரணமானது
இதுவே நிஜமானது

செத்துவிட்ட என் மனதை இனி
சுடுகாட்டு தீயா சுட்டுவிடும்

Wednesday, April 1, 2009

உயிரோவியம்
எத்தனை இன்னல் வரினும்
அத்தனையும் மறந்து்போகும்
உன் அன்பு முத்தத்திலும்
அம்மா என்ற அழைப்பிலும்

அல்லி மலர் பாதமும்
அனிச்ச மலர் தேகமும்
கண்டவர் உள்ளம் உவகை கொள்ளும்
உங்களை காணாதவர் உலகம் இருளும்

இனணயற்ற ஒவியன் பிரம்மன்
எந்த தூரிகை கொண்டு உன்னை
வரைந்தனன் உன் வண்ணம் என்ன‌
வானவில்லில் கடைந்ததோ
நற்றமிழும் அற்றமிழும்
நாணம் கொள்ளும்
நின் அற்புத வதனத்தின்
அழகை பகர இயலாது

ஒவியங்கள் அசைவதில்லை
நீ மட்டும் அசைந்தாடும்
உயிரோவியமாய்!!!!
பட்டாம் பூச்சிக்கு நன்றி சுரேஷ்
சுரேஷ் புது ப்ளாகர் என்றாலும்
அவரின் நகைச்சவை இயல்பாக
இருந்தபடியால் பத்து பதிவில்
பட்டாம்பூச்சி விருது பெற்றவர்


என்னுடைய பதிவுகளை நான் கவிதை
என்று எப்பொழுதும் கூறுவதில்லை
ஒரு சில கருத்துகளை உங்களிடம்
பகிர்ந்துகொண்டேன்
அவ்வளவே

இவை நான் பார்த்தவை
கேட்டவை,படித்தவை என
என் மனதில் நின்றவை

என்னுடைய முதல் பதிவு
தமிழர் உணர்வுகள் என
என்னுடைய மற்றொரு ப்ளாகில்
உள்ளது

பட்டாம்பூச்சி விருதை இவர்களுக்கு
பகிர்ந்தளிக்கிறேன்


செய்யது அஹம்மது நவாஸுதீன்,
சாய்ராபாலா, அசீ

சாய்ராபாலா அருமையான
அழகான கவிதைகளுக்கு
சொந்தக்காரர்
http://kadalapura.blogspot.com/

அசீயின்
கவிதை நயம்
மனதை அள்ளும்
எதுகை மோனை
என வார்தை துள்ளும்
http://hummingbird-azee.blogspot.com/


செய்யது அஹம்மது நவாஸுதீன்,
காதல் கதையுடன் கவிதை
சொல்லுவதில் வல்லவர்.
http://syednavas.blogspot.com/