Wednesday, June 24, 2009

கல்வி கட்டணங்களிலிருந்து எங்களை காப்பாற்றபோவது யார்???


ஆயகலைகள் அறுபத்து நான்கோடு
அறுபத்தைந்தாய் ஆங்கிலமொழி கல்வி என்று சேர்ந்ததோ
அப்போது ஆரம்பித்தது எங்களின் அவஸ்தை....


அனைத்து பெற்றோர்களுமே
ஆங்கில மீடியத்தில் எங்கள்
அன்பு செல்வங்களை சேர்க்க
ஆசை கொள்கின்றோம்....

கான்வென்ட்களின் வாசல்களில் தவமிருக்கின்றோம் விளைவு
கல்வி நிறுவனங்கள் கமர்சியல் சென்டர்களாகிவிட்டது

L.K.G. யில் சேர்க்க 50000 நன்கொடை அதிலிருத்து
பொறியியல் கல்லூரிக்கு 15 லகரம் வரை
என தாரை வார்க்கின்றோம்.....

எங்களின் எதிர்கால கனவுகள்
நிஜமாகிட வேண்டும் என
நிகழ்காலத்தில் நிம்மதியிழந்து தவிக்கும்...

எங்களை கல்வி கட்டணங்களிலிருந்து
காப்பாற்றபோவது யார்????

Monday, June 22, 2009

தேவதைகளின் தேவதைகள்....














சில படங்கள் பார்க்கும் போதே மனதை மயக்கிடும்

என்னை கவர்ந்த இந்த புகைப்படங்கள் உங்களுக்காக.....

Saturday, June 20, 2009

என்னை வினாக்குறியாக்கிய ஆச்சரியக்குறியே பதில் சொல்வாயா???


அன்னையின் வயிற்றில் சூல் கொண்டபோது
அறியவில்லை உனக்காக தான் உருவாகின்றேன் என்று!!!

மழலையாய் எனை கையிலேந்தி கொஞ்சி
மகிழ்ந்தபோது நீயும் அறியவில்லை
நான் தான் உன் துணையென்று!!!

காற்றை பார்த்ததும் இலைகள் படபடக்கும் ஆனந்தத்தில்
உனை கண்டதும் என்னிதயம் துடிக்கின்றதே அதே லயத்தில்!!!

ஏன் இந்த இதயவேதனையை
எனக்கு பரிசளித்தாய்??? என்னவனே!!!

உன் ஒவ்வொரு தீண்டலிலும்
எனக்குள் ஏதோ ஒரு நெருப்பை ஏற்றிவைக்கின்றாய்
எல்லா நரம்புகளையும் வியர்க்க வைக்கின்றாய்!!!

என்
அடிமனதை அகழ்ந்து அகழ்ந்து
ஆராய்ந்து பார்க்கின்றேன்
உன்னிடம் மயக்கம் கொள்ள காரணம்
என்னவென்று???

முகிலுக்குள் புகுந்து வெண்ணிலா வெளியேறும்
நேரத்திற்குள் என் உயிரை இப்புறம் துளைத்து
அப்புறம் வெளியேறும்
அசகாய அஸ்திவாரமான உன் விழிப்பார்வையிலா??? இல்லை

காற்றை கூட கிறக்கம் கொள்ளவைத்து என்
காதுகளை ஊடுருவும் உன்
காதல் மொழி பாஷைகளிலா???

எதை கண்டு உன்னிடம் மயக்கம் கொள்கிறேன்
எனை வினாக்குறியாக்கிய ஆச்சரியக்குறியே பதில் சொல்வாயா???


(பி.கு) இன்று பிறந்த நாள் காணும் என்னவனுக்காக ஒரு சின்ன கவிதை

Tuesday, June 16, 2009

காத்திருக்கிறேன் அவனுக்காய்.....


எவனைக்கண்டால் கண்கள் தமை மறந்து
இமைக்கமறுக்கின்றதோ
எவனின் பிம்பம் எனக்கு பதிலாய் கண்ணாடியில் தெரிகின்றதோ....

எவனைக்கண்டால் என் எலும்புக்குள்ளும் மஜ்ஜைக்குள்ளும்
எதிர்பாராத குளிர் உண்டாகி
எல்லா உறுப்புகளின் இயக்கமும் தடைபடுகின்றதோ.....

எவனின் சுவாசகரிமிலவாயு கூட கமகமக்கின்றதோ....
எவனைக்கண்டால் காரணமேயில்லாமல் நாணம் கொள்கிறேனோ....

எவனைக்காணும் போது வெளிச்சமும் காணாதபோது இருளும் எனை சூழ்கின்றதோ...

எவன் விலகிச்சென்றாலும் என்னுள் விஸ்வரூபம் எடுக்கின்றானோ
காத்திருக்கின்றேன் அவனுக்காய்
என் காதலும் கவிதையும் புரியப்போகும் நாளுக்காய்.....

Monday, June 15, 2009

இவர்களா இறைவனின் அவதாரங்கள்???


ஒரு சில மனிதர்கள் தாங்கள் தான் கடவுளின் அவதாரங்கள்
என பிதற்றுவதையும் அவர்களை நம்பி
லட்சோபலட்சம் மக்கள் தங்கள் பணத்தையும் பொருட்களையும்
வாரியிறைக்கும் முட்டாள்தனத்தையும் கண்டு மனம் வெதும்பி கேட்கிறேன்

யார் இறைவனின் அவதாரங்கள்???
தங்களை ஆண்டவனின் அடுத்தவாரிசு என கூறும்
இவர்கள் எல்லாம் இத்தனை வருடங்களாய் எங்கிருந்தனர்??

இவர்களுக்கு அத்தனை வலிமையுண்டென்றால்
இவர்களால் ஏன் நிறுத்தமுடியவில்லை
பெருகிவரும் கொலைகளை, கொள்ளைகளை
தொடரும் கற்பழிப்புகளை, லட்சக்கணக்கில் புதைக்குழிக்குள்ளும்
போரிலும் செத்துக்கொண்டிருக்கும் என் இனமக்களை???

ஆழிதனது அகலவாயை திறந்து
ஆயிரமாயிரம் உயிர்களை உள்வாங்கியதே
அப்பொழுது எங்கிருந்தார்கள் இந்த
அவதாரபுருஷர்கள் ஒரு அபாயமணி கூட அடிக்காமல் ???

ஏழைக்கு இரங்காது இரும்பு மனம் கொண்டு
ஏதோ ஒரு மடாதிபதிக்கும் போலிச்சாமியாருக்கும்
சாமரம் வீசுபவர்களே புறந்தள்ளுங்களேன் இந்த போலிகளை!!!

நமக்குபின் தோன்றிய எத்தனையோ மதங்கள்
மனித நேயமும் , மக்கள் சேவையும் என உயர்ந்துகொண்டுள்ளது
நாம் மட்டும் இறைவனை உணர்வதற்கு
இன்னமும் இடைதரகர்களை நம்பிக்கொண்டிருக்கின்றோம்
நாம் வெட்கித்தலைகுனியவேண்டிய வெட்கக்கேடல்லவா இது???

யோசித்துபாருங்கள் படங்களிலிருந்து
விபூதியும் குங்கும மழையும் பொழிகின்றதாம்!!!!
அதற்கு பதிலாய் அவர்களை
பொற்காசுகளும் நவமணிகளுமாய் பொழியச்சொல்லுங்கள்
உங்கள் பொருளாதாரமாவது உயரட்டும்!!!!!

நான் நாத்திகவாதி அல்ல ஆனால் இவர்களை வழிபட்டால் தான்
நான் ஆத்திகவாதி என்றால் நான் ஆத்திகவாதியும் அல்ல

உங்களை பொறுத்தவரை நான் விதண்டாவாதியாகவே இருந்துவிடுகிறேன்!!!!

Thursday, June 4, 2009

என்ன பதில் சொல்லபோகின்றோம்????



உலக வெப்பமயமாதலால்
உருகிக் கொண்டிருக்கும் பனிப்பாறைகள்.....

குறைந்து கொண்டிருக்கும் நிலப்பரப்பு
குறைக்கவே முடியாத மக்கள் தொகை பெருக்கம்....

ஆயிரமாயிரம் ஆண்டுகள்
அழகாய் இருந்த பூமியை
அரை நூற்றாண்டுக்குள் சேதப்படுத்தியாயிற்று.....

காற்றுப் பெண்ணின் முகத்தை
கரிப்புன்னகையினால் கறைப்படுத்தியாயிற்று....

பெட்ரோலிய பொருட்களை
பெருமளவில் தீர்த்தாயிற்று....

இயற்கை அன்னையின் செல்வங்களை
இயன்ற அளவு அழித்தாயிற்று....

விளை நிலங்களை வந்த
விலைபேசி விற்றாயிற்று....

கான்கீரிட் காடுகளை
கண்மண் தெரியாமல் பெருக்கியாயிற்று....

நமக்கு முந்தைய தலைமுறையினர்
நமக்கு தந்த வளங்களை
நாமே முடிந்தளவு சுரண்டியாயிற்று....

அடுத்த தலைமுறையினர்

எங்களுக்கு என்ன மீதம் வைத்தாய்
என கேட்கப்போகும் கேள்விக்கு
என்ன பதில் சொல்லபோகின்றோம்????