Thursday, December 23, 2010

மிருகம் ஒன்று ( இரண்டாம் பாகம்)


நான் நேசித்து வந்த
மிருகமொன்று
யாசித்து வந்தது
யோசித்து சொல்வதாய்
பேசித்து அனுப்பி
தவிர்த்திருக்க....

தனித்திருந்து
தனித்திருந்து
பசித்திருந்த
அம்மிருகம்
மென் தசைகளும்
குருத்தெலும்புகளும்
நொறுக்கி
மெதுவாய் எனை வென்றது
பின்னொரு நாளில் கொன்றது!!!

Tuesday, December 14, 2010

கரைந்த நிழல்.....


தூக்கம் வேர்பிடிக்காத் தருணமொன்றில்
தனிமையின் சாளரத்தில் வீற்றிருந்தேன்
அந்தியெங்கும் சாம்பல் வர்ணோவியம்
கோட்டுச்சித்திரமாய்.....

சிலந்தி வலை பின்னலாய்
தொடரும் சிந்தனைகள்.....

எங்கோ ஒரு ஒலம் கேட்க
மனம் பதைத்து வெகுதூரம்
தேடியலைந்தேன்.....

பின் இலை பெய்து முடித்த
மரமொன்றின் கீழ் நின்று
என் நிழல் நோக்க அது
விம்மிக்கொண்டே கரைந்தழிந்தது.....

எனக்கு நானே துணையில்லை
என்பதை உணர்ந்து மனம் பதைக்க
இலக்கற்று நடக்கத்தொடங்கினேன்.....

Wednesday, December 8, 2010

பேசும் பொற்சித்திரமே!!!!


கன்னத்தோடு கன்னமிழைத்து
முத்தம் நூறு தந்துவிடு
கண்ணிமை வருடலில்
கவலையெல்லாம் தீர்த்துவிடு....

முந்தானை போர்வைக்குள்
முகம் போர்த்து
பூ விழி வருடலில்
என் மனம் சாய்த்து
என் உதிரம் சுவைத்து வளர்ந்த
பிள்ளைக்கனி அமுதே
பேசும் பொற்சித்திரமே...

உன் பிஞ்சு பால் சதையை
அள்ளியெடுத்து
கொஞ்சி மகிழ்கையில்
உளம் களித்திருப்பேன்
எதிர் வரும் இன்னல் யாவும்
எதிர்த்து நான் நிற்பேன்........
Monday, December 6, 2010

பிரிய தோழி தீபாவிற்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்!!!பள்ளி தோழி அவள்...
என் பால்யத்தில் பாதி அவள்...
பாசமிகு சிநேகிதியாய்...
பதின்ம வயதில் என் காதலியாய்...


பசுமரத்தணியாய்
பதிந்திருக்கும்
சிநேகத்துடன்
கரம் கோர்த்து அவளுடன்
சுற்றி திரிந்த நாட்கள்


இன்று பாரதத்தின் ஏதோ ஒரு
மூலையில் நீயும்....
மற்றொரு மூலையில் நானும்....

உன் குடும்பத்தாரின்
அன்பு வலையில்
அகப்பட்டுக்கொண்டிருக்கும்
என் பிரிய சிநேகிதியே....

இன்று பிறந்த நாள் காணும்
நீ என்றும் நலமே வாழ
வாழ்த்தும்
உன் அன்பு தமிழ்....

I MISS YOU A LOT MY DEAR.....

Tuesday, November 16, 2010

எனக்கான கவசங்கள்....


எனக்கான கவசங்களுடன்
பிரசவிக்கப்பட்டிருக்கின்றேன்.....

உளைகிற மனம்
உள்ளே அழுதாலும்
வெளியே முகம் மலர்த்தும்
கலையை உங்களுக்காய் வளர்த்திருக்கிறேன்.....

எமை நொறுங்கச் செய்து
நெஞ்சில் நெறி கட்டி
கொண்டவை எவரிடத்தும்
பகிரப்படாது என்னுள்
புதையுண்டிருக்கும்.....

காலத்தின் சுழற்சியில்
கட்டுக்கள் கழன்றிட
சுதந்திர வானில்
சிறகசைப்பேன் வான்தொட்டு.....

என் மீள்வருகைக்காய்
நீங்கள் தவமிருக்கும் நாட்களை
மனத்திரையில் கண்டு களித்திட்டு.....

Thursday, November 11, 2010

கலியுகபுருஷனும் பிரம்மராட்சதனும்.....


காதல் கொண்டு
கரம் பிடிப்பான்
கருத்தொருமிக்கவில்லையெனில்
கழட்டிவிட்டுச் செல்லும்
கலியுகபுருஷனும்....

தன் தேவை முடிந்ததும்
பெண் (பிள்ளை) தேவையில்லை என
கருவறையை
கல்லறையாக்குபவனும்....

பத்து வயது குட்டி பெண்ணோ
பருவத்து சுட்டி பெண்ணோ
பத்தினியோ
பரத்தையோ
கொன்றழித்து தின்றொழி
காமப்பசிக்கு
குற்றமொன்றுமில்லை எனும்
நவீன சாத்தான்களும்....

பெண்ணின் பிணத்தை கூட
புணரும் பேராண்மை
படைத்த
பிரம்மராட்சதர்களும்
உலவும் பூமியில்....
பெண்ணாய் பிறப்பெடுத்தற்கே
பெரும்பாவம் செய்திருத்தல் வேண்டும்.....

Tuesday, November 9, 2010

வீசும் தூறலிடை....


மண்ணை முத்தமிட்டு
துள்ளிகுதித்து தாளலயத்துடன்
சங்கீதம் கற்றுக்கொடுக்கும்
வெள்ளிமலர்த்தூவல்...

வீசும் தூறலிடை
மழை நூலில் கோர்த்த
நீர்ப்பூக்கள் நம்மேல் விழ....

மழையின் சீண்டலுக்கு ஒளிந்து
நாம் மரத்தடியில் ஒதுங்க.....

நீள்விசும்பினிடை நீந்தும்
நிலவும் நட்சத்திரங்களும்
நமை கண்டு நகைக்க.....

அரும்புகள் கண்சிமிட்ட
இலைகளெல்லாம்
வீழ்கின்றன அடுத்தடுத்து.....

கண்களில் நேசம் கொண்டு
நீ எனை பருகும் இக்கணத்தில்
மெளனத்தின் பொருட்டு
இதழ் மூடியிருப்பின்
இம்மழைக்காலத்தின்
மாலைப்பொழுதில்
தப்பித்துக்கொள்வேன்
உன்னிடமிருந்து...

Saturday, October 30, 2010

காவியுடைக் கள்வர்கள்


அண்ட சராசரங்கள் எம்

ஆளுகைக்கு கீழ் என்பன் தமை

அண்டி நிற்போர்க்கு

ஆனந்தமே எல்லை என்பன்.....

சிந்தாந்த செதுக்கல்களை நம்

சிந்தைக்கு தெளித்திட்டு

சிற்றின்பத்தில் மூழ்கும்

அற்பப் பதர்கள் இவர்கள்.....

கஞ்சாவும் கொகேயினும் முகர்ந்து

பிரம்மத்தை அறிந்ததாய்

பினாத்திடும் பித்தர்கள்.....

களைந்தொழிக்கவேண்டும்

கபால விழிகளில் மிகுந்திருக்கும்

காமத்தை அறியா கன்னியருக்கு

களவியல் பாடத்தை

கற்பிக்கும்

கள்ளவிஷக்காளான்களை

கயமையில் திளைத்திடும்

காவியுடைக்கள்வர்களை.....

Tuesday, October 26, 2010

குருதி வேட்கை .... ( நன்றி கீற்று )
எனை ஒரு வளர்ப்பு
மிருகமாகவே
கருதுகின்றனர்.....


நில் என்றால் நிற்பதற்கும்
செல் என்றால் செல்வதற்கும்
கட்டளைகளுக்கு அடிபணியவும்
கட்டுப்பாடுகளுக்கும் பழக்குகின்றனர்
ஆழ்ந்த சினேகத்தின் நகைப்போடு.....


என் சுயத்தை
அவர்கள் வெறுக்கின்றனர்....


அவர்கள்
அறிவதாயில்லை
என்னுள்ளும்
கோரைப்பற்களும்
கூர் நகங்களும்
குருதி வேட்கையுடனிருப்பதை....


Tuesday, October 19, 2010

விழிப்பிளவுள் சரிந்தவள்!!!!


உன் விழிப்பிளவுள்
வழுவிச் சரிந்தவளை
விலகவிடாதே
இறுக அணைத்துக்கொள்
இடைவெளி அதிகம் வேண்டாம்.....

கழுத்து வளைவில் முகம் புதைத்து
காதோரம் மெல்ல கிசுகிசுத்து
காதலை மெல்லச் சொல்
எனை கொல்லாமல் கொல்....

இருளின் நிறத்தில் ஒளிர்கின்ற
மீசையின் ஒற்றைமுடி
ஸ்பரிசத்தில் நான் கிளர்ந்தெழ
முத்தங்களால் கன்னக்குழியை நிரப்பி
சுவாசப்பையை சலம்பி திரியவை....

மெளனங்களும் மறுகல்களும்
குழைவுகளும் சினுங்கலுமாய்
பேரானந்த களிப்பில் உன்
உள்ளங்கை வெப்பத்தில்
நான் உருகும் இக்கணத்தில்
நிகழட்டும் என் மீள்பிறப்பு.....

Tuesday, October 12, 2010

கருப்பையின் வலி....


எண்ணற்ற விரதங்கள்
பரிந்துரைக்கப்படும்
பிள்ளையற்றவளுக்காய்....

எண்ணிலடங்கா
இன்னல் தரும் பட்டங்கள்
இலவசமாய் வழங்கப்பட்டு
இதயத்தின் அடியாழம் வரை
ரணப்படுத்தப்படும்....

வித்தியாசமான வைத்தியங்கள் தரும்
விதவிதமான வாதைகளை விட
வார்த்தையம்புகள்
வலிக்கத்தைக்கும்....

வாராது வந்த மாமணியே
என் மணி வயிற்றின் தாழ் திறப்பது
எப்போது என
ஏக்கங்களை சுமந்து
காத்திருப்பவளுக்கு மட்டுமே தெரியும்
காத்திருத்தலின் வலியும்
காலியாய் கிடக்கும் கருப்பையின் வலியும்....Monday, October 4, 2010

நெருப்பு குளியல்....


முகமறியாத போதும்
எனை முன்னிறுத்தி.....

பொய் வார்த்தைகளாலும்
நயவஞ்சகங்களாலும்
ஓயாத துரோகங்களாலும் நிறைக்கப்பட்ட
அழுகிய புன்னகையின் துர்நாற்றம்
கண்ணுறுகையில்.....

அடிபட்டு ஓலமிட்டு பின் அடங்கும்
மனம் அதனிடம் சப்திப்பதற்கு
மொழியின்றி ஸ்தம்பிக்கிறேன்....

பனிப்புற்களில் பாதம் பதித்து
ஏறுவெயிலில் நான் நடக்க
கசியும் மோனவெளியில்
கதிரவனின் வெளிச்சத்தில்
நிழல் அழிவதை
கண்டு துக்கம் பீறிட
மரத்திடும் நெருப்புக் குளியல்.....
-----------------------------------------------------------

Thursday, September 2, 2010

செந்தூரபந்தம் தொடரட்டும் என்றும்!!!!!


நாதஸ்வர மேளதாளங்கள் முழங்க
நற்றமிழாலும் அற்றமிழாலும்
நல்லோர்கள் வாழ்த்த.....

பட்டாடை சரசரக்க
புது மெட்டி ஒலிக்க
நறுமலர்களால் கோர்க்கப்பட்ட
மாலையை தோளில் ஏந்தி....

சந்தனக்களபமும் திலகமும் சூடி
விழிகளில் விரவியஅழகிய
விதிர்ப்புடனிருக்கும்
மணமகளுக்கு
மங்கல நாணை
மணமகன் சூட்ட....

பூச்சொரிதலாய்
இனிய உணர்வுகளுடன்
தொடங்கும்
இச்செந்தூரபந்தம்
தொடரட்டும் என்றும்!!!!

கடல்புறா பாலாவின் சகோதரி
சங்கீதாவிற்கு இன்று திருமணம்
வாழ்த்துவோம் வாருங்கள்


Tuesday, August 31, 2010

எதிர்வரும் நாளெமதில்!!!!


நிசப்தம் பூக்கும் இரவொன்றில்
வனாந்திரப்பேரமைதியில்
இலக்குகளற்றவெற்றுச்சுவடுகளில்
உறக்கமற்று அலைகிறேன்
வசீகரமிழந்து......

அடுத்தொன்று
இன்னொன்று
மற்றொன்று
பிறிதொன்று
எனத்தேடித்தளர்ந்து.....

தன்னம்பிக்கை தத்தளிக்க
தோல்வித்தருணங்கள் சூழ்ந்திட
மனம் பிறழ்ந்து
உளறிந்திரிந்து
மிழற்றுகிறேன்மூர்க்கமாய்....
எதிர்வரும் நாள் எமதில்
இற்றிடப்போகும்சிறகின்
நிலைநினைந்து.....

Thursday, August 26, 2010

வேண்டும் விடுதலை!!!!


யார் சொல்வது நாம்
அடிமைத்தளையிலிருந்து
விடுபட்டுவிட்டோமென.....

அழுகிச்சிதைந்து
ஆணிவேரில் புற்றேறி
அருவெறுப்பாய் நிற்கின்றது
நம் நாட்டு அரசியல்.....

சொந்தமக்களை சோற்றுக்கு
அலையவிட்டுவிட்டு அன்னியனை
ஆளவைத்து அழகு பார்க்கின்றோம்
அதிகாரங்களுக்கு அடிமைப்பட்டு....

விதேசிகளை துரத்திவிட்டதாய்
பீற்றிக்கொண்ட சுதேசிகள் இன்று
விதேசி பொருட்களுக்கு அடிமையாய்....

ஜாதியென்றும் மதமென்றும்
இனமென்றும் மொழியென்றும்
நமை நாமே பகுபடுத்தி திரிகின்றோம்
மூளையிருந்தும் அடிமையாய்.....

போதும் இந்தியனேபோதும்
நிலைகெட்டு மானம்கெட்டு
அலைந்து திரிந்தது போதும்
புறப்பட்டு வா
புதிய பாரதம் அமைப்போம்
உண்மையான சுதந்திர
காற்றை சுவாசித்திற்போம்..

Thursday, August 19, 2010

சரியும் இரவு!!!


மெல்ல இரவு சரிந்து
மேகம் தரையிறங்கியது....

மண் தரையிலோ
மழையின் கால்தடங்கள்....

மஞ்சள் வைரங்களாய்
மவுனமொழி பேசும் நட்சத்திரங்கள்...

இவையணைத்தையும்
இயல்பான ரசனையுடன் குழைந்து நான்
இயற்கையுடன் ஒன்றிட்டேன்....

காற்றும் மழையும்
தென்றலும் தூரலும்
பனியும் குளிரும் வாடையுமாய்
எனை தழுவிச்சென்றது அருவி....

எரியும் இருளினூடாக
அருவி நீரோடு மிதந்தழிந்தது
என் இன்ன பிறவும்!!!!

Tuesday, August 10, 2010

இதயம் ரணமானது


திக்கற்ற வெளியில்
திசையறியாது

தவிக்கின்றேன் தோழி
திரும்பி பார்த்தால்

உற்றவள் நீயும் இல்லை
உறவினரும் இல்லை.....

கண்ணில் உனை வைத்தால்
கண்ணீருடன் கரைந்திடுவாய்

என எண்ணி உன்னை
என் இதயத்தில் அன்றோ இருத்தினேன்
என் இதயத்தின் ஓசை கேட்டு

இதமாய் நீ உணர்வாய் என
இன்று இதயமும் ரணமானது
இதுவே நிஜமானது.....

செத்துவிட்ட என் மனதை இனி
சுடுகாட்டு தீயா சுட்டுவிடும்...

Sunday, August 1, 2010

யாருமற்ற வான் பொய்கையில் வெறுமையுற்ற நிலா !!!


அவள் வாழ்வில்
மகிழ்ச்சி நிறைந்த
வார்த்தைகள்
அனைத்தையும் ஒருவன்
களவாடிசென்று விட!!!!

அக்கினிப்பூவாய் தகிக்கும் மஞ்சத்தில்
தோகையெனத் துவள்கிறாள்
அமைதியின் கரிய காலடியில்
மனுஷர்களின் பேராசையினால்
காயப்பட்ட பூஞ்சிறகாய் அவள் மனம்!!!!

இதுவரை அழுந்தித் துயர் தரும்
வலிகளை பிடுங்கியெறிய
அவள் ஓடிக்கொண்டிருக்கிறாள்
பாத மணற்கற்றைகள் எரிய!!!!

கானகத்தின் நீட்சி கொண்ட
உயிர்த்தாவரத்தின் மலர்க்கும்
சொல்லொன்றில்
அரும்பித்தழைக்கவேண்டும்....

யாருமற்ற வான் பொய்கையில்
வெறுமையுற்ற நிலாவின்
மென்னகையின் இலைகள்!!!!

Monday, July 26, 2010

பிஞ்சுகள் துயின்றிடும் பொழுதில்!!!


மெல்லிய விரல்களால்
என் நரம்பு வயல்களில்
நடவு நட்டு....

என் வெப்பத்தை
போர்த்துக் கொண்டு
உறங்கவேண்டுமென
உப்பு மலர்களை
உதிர்க்கின்ற குட்டி நட்சத்திரம் ஒன்று!!!

ஊற்றாய் சந்தோஷம் பொங்கிட
உள்ளார்ந்த குறும்பில்
உதட்டோரம் சிறு குழிவுடன்
செம்பஞ்சுக்குழம்பில் தோய்த்த
பிஞ்சப்பாதங்களுடனும்

செல்லச்சிணுங்கலும்
மெல்லிய மினுங்கலுமாய்
என் மார்போடணைத்து
மடி மீது அமர்ந்து
சிறு கதை சொல்ல
கேட்டு கண்ணயரும்
பட்டுத்தென்றல் மற்றொன்று!!!!

இவர்களின்
மோகனப்புன்னகையில்
மயங்கி நின்றதில்
என் கவிதைகள் யாவும்
முற்றுப்பெறாமல் முடிந்துவிடுமின்று.....

Wednesday, July 14, 2010

நிலவின் ஒளியில் உருகும் சூரியன்!!!


சூரியன் தன் வீரியத்தை
தொலைத்த கோபத்தில்
சிவந்து தணிந்து
கொண்டிருந்த வேளையில்

ஒரு தர்க்கத்தின் முடிவில்
உயிரை கருக செய்யும்
திராவகத் துளிகளை
அவன் வார்த்தைகள் சிதற

கந்தகமிட்ட காகிதமாய்
வெந்து உலர்ந்தது நெஞ்சம்
உணர்வுகளின் மௌன மறுகல்
ஊமை மலர்களின் மௌன விகசிப்பாய்
மெல்ல மெல்ல குறைந்தது விசும்பல்கள்

சற்றே மனம் அடங்கி குளிர
வெட்க புன்னகை யொன்று இதழ்களில் தோன்றி
தேகம் முழுவதும் பரவ
விழி நாணேற்ற
முறிந்தது அவன் திமிர்

உள்ளே ஏதோ ஒன்று இற்று உருகிட அதன்
சாறாக கண்ணில் நீர்!!!!

Wednesday, July 7, 2010

வன்மம் தீரா பெருவெளி!!!


நெடியதொரு தனிமைவெளியில்
நான் நதியின் ஊடாக
அலைவு கொண்டிருந்தேன்!!!

சலனமற்ற நீர் பிம்பத்திலோ
பரிகாசத்தின் வேதனை!!!

விதியின் சறுக்குப்பாதை
தந்த கசப்பை
தினமும் விழுங்கிக் கொண்டிருக்க!!!

சிலரின் வன்மம் படிந்த
வார்த்தைகளோ
அம்பென பாய்ந்து இப்பொழுதும்
குருதியை பெருக்கிக்கொண்டிருக்கின்றது!!!

Saturday, July 3, 2010

என் அன்பு மகன் பாலாஜிக்கு பிறந்த நாள் இன்று!!!!
எண்ணற்ற தவத்தின் பலனாய்
எனக்குள் உதித்த சூரியனே!!!

மலரிதழ்களில் வியர்த்திருக்கும்
பனித்திவலைகளாய்
உன் மழலை மந்தகாசமும்
குறுகுறுத்த விழிகளில்
கசியும் புன்னகையுமாய்
எனை வளைய வரும்
பேசும் பொற்சித்திரமே!!!
இன்று பிறந்த நாள் காணும் நீ
பார்போற்ற பல்லாண்டு காலம்
நீடுழி வாழ வாழ்த்துகிறேன்!!!!