Saturday, October 30, 2010

காவியுடைக் கள்வர்கள்


அண்ட சராசரங்கள் எம்

ஆளுகைக்கு கீழ் என்பன் தமை

அண்டி நிற்போர்க்கு

ஆனந்தமே எல்லை என்பன்.....

சிந்தாந்த செதுக்கல்களை நம்

சிந்தைக்கு தெளித்திட்டு

சிற்றின்பத்தில் மூழ்கும்

அற்பப் பதர்கள் இவர்கள்.....

கஞ்சாவும் கொகேயினும் முகர்ந்து

பிரம்மத்தை அறிந்ததாய்

பினாத்திடும் பித்தர்கள்.....

களைந்தொழிக்கவேண்டும்

கபால விழிகளில் மிகுந்திருக்கும்

காமத்தை அறியா கன்னியருக்கு

களவியல் பாடத்தை

கற்பிக்கும்

கள்ளவிஷக்காளான்களை

கயமையில் திளைத்திடும்

காவியுடைக்கள்வர்களை.....

Tuesday, October 26, 2010

குருதி வேட்கை .... ( நன்றி கீற்று )
எனை ஒரு வளர்ப்பு
மிருகமாகவே
கருதுகின்றனர்.....


நில் என்றால் நிற்பதற்கும்
செல் என்றால் செல்வதற்கும்
கட்டளைகளுக்கு அடிபணியவும்
கட்டுப்பாடுகளுக்கும் பழக்குகின்றனர்
ஆழ்ந்த சினேகத்தின் நகைப்போடு.....


என் சுயத்தை
அவர்கள் வெறுக்கின்றனர்....


அவர்கள்
அறிவதாயில்லை
என்னுள்ளும்
கோரைப்பற்களும்
கூர் நகங்களும்
குருதி வேட்கையுடனிருப்பதை....


Tuesday, October 19, 2010

விழிப்பிளவுள் சரிந்தவள்!!!!


உன் விழிப்பிளவுள்
வழுவிச் சரிந்தவளை
விலகவிடாதே
இறுக அணைத்துக்கொள்
இடைவெளி அதிகம் வேண்டாம்.....

கழுத்து வளைவில் முகம் புதைத்து
காதோரம் மெல்ல கிசுகிசுத்து
காதலை மெல்லச் சொல்
எனை கொல்லாமல் கொல்....

இருளின் நிறத்தில் ஒளிர்கின்ற
மீசையின் ஒற்றைமுடி
ஸ்பரிசத்தில் நான் கிளர்ந்தெழ
முத்தங்களால் கன்னக்குழியை நிரப்பி
சுவாசப்பையை சலம்பி திரியவை....

மெளனங்களும் மறுகல்களும்
குழைவுகளும் சினுங்கலுமாய்
பேரானந்த களிப்பில் உன்
உள்ளங்கை வெப்பத்தில்
நான் உருகும் இக்கணத்தில்
நிகழட்டும் என் மீள்பிறப்பு.....

Tuesday, October 12, 2010

கருப்பையின் வலி....


எண்ணற்ற விரதங்கள்
பரிந்துரைக்கப்படும்
பிள்ளையற்றவளுக்காய்....

எண்ணிலடங்கா
இன்னல் தரும் பட்டங்கள்
இலவசமாய் வழங்கப்பட்டு
இதயத்தின் அடியாழம் வரை
ரணப்படுத்தப்படும்....

வித்தியாசமான வைத்தியங்கள் தரும்
விதவிதமான வாதைகளை விட
வார்த்தையம்புகள்
வலிக்கத்தைக்கும்....

வாராது வந்த மாமணியே
என் மணி வயிற்றின் தாழ் திறப்பது
எப்போது என
ஏக்கங்களை சுமந்து
காத்திருப்பவளுக்கு மட்டுமே தெரியும்
காத்திருத்தலின் வலியும்
காலியாய் கிடக்கும் கருப்பையின் வலியும்....Monday, October 4, 2010

நெருப்பு குளியல்....


முகமறியாத போதும்
எனை முன்னிறுத்தி.....

பொய் வார்த்தைகளாலும்
நயவஞ்சகங்களாலும்
ஓயாத துரோகங்களாலும் நிறைக்கப்பட்ட
அழுகிய புன்னகையின் துர்நாற்றம்
கண்ணுறுகையில்.....

அடிபட்டு ஓலமிட்டு பின் அடங்கும்
மனம் அதனிடம் சப்திப்பதற்கு
மொழியின்றி ஸ்தம்பிக்கிறேன்....

பனிப்புற்களில் பாதம் பதித்து
ஏறுவெயிலில் நான் நடக்க
கசியும் மோனவெளியில்
கதிரவனின் வெளிச்சத்தில்
நிழல் அழிவதை
கண்டு துக்கம் பீறிட
மரத்திடும் நெருப்புக் குளியல்.....
-----------------------------------------------------------