Tuesday, November 16, 2010

எனக்கான கவசங்கள்....


எனக்கான கவசங்களுடன்
பிரசவிக்கப்பட்டிருக்கின்றேன்.....

உளைகிற மனம்
உள்ளே அழுதாலும்
வெளியே முகம் மலர்த்தும்
கலையை உங்களுக்காய் வளர்த்திருக்கிறேன்.....

எமை நொறுங்கச் செய்து
நெஞ்சில் நெறி கட்டி
கொண்டவை எவரிடத்தும்
பகிரப்படாது என்னுள்
புதையுண்டிருக்கும்.....

காலத்தின் சுழற்சியில்
கட்டுக்கள் கழன்றிட
சுதந்திர வானில்
சிறகசைப்பேன் வான்தொட்டு.....

என் மீள்வருகைக்காய்
நீங்கள் தவமிருக்கும் நாட்களை
மனத்திரையில் கண்டு களித்திட்டு.....

Thursday, November 11, 2010

கலியுகபுருஷனும் பிரம்மராட்சதனும்.....


காதல் கொண்டு
கரம் பிடிப்பான்
கருத்தொருமிக்கவில்லையெனில்
கழட்டிவிட்டுச் செல்லும்
கலியுகபுருஷனும்....

தன் தேவை முடிந்ததும்
பெண் (பிள்ளை) தேவையில்லை என
கருவறையை
கல்லறையாக்குபவனும்....

பத்து வயது குட்டி பெண்ணோ
பருவத்து சுட்டி பெண்ணோ
பத்தினியோ
பரத்தையோ
கொன்றழித்து தின்றொழி
காமப்பசிக்கு
குற்றமொன்றுமில்லை எனும்
நவீன சாத்தான்களும்....

பெண்ணின் பிணத்தை கூட
புணரும் பேராண்மை
படைத்த
பிரம்மராட்சதர்களும்
உலவும் பூமியில்....
பெண்ணாய் பிறப்பெடுத்தற்கே
பெரும்பாவம் செய்திருத்தல் வேண்டும்.....

Tuesday, November 9, 2010

வீசும் தூறலிடை....


மண்ணை முத்தமிட்டு
துள்ளிகுதித்து தாளலயத்துடன்
சங்கீதம் கற்றுக்கொடுக்கும்
வெள்ளிமலர்த்தூவல்...

வீசும் தூறலிடை
மழை நூலில் கோர்த்த
நீர்ப்பூக்கள் நம்மேல் விழ....

மழையின் சீண்டலுக்கு ஒளிந்து
நாம் மரத்தடியில் ஒதுங்க.....

நீள்விசும்பினிடை நீந்தும்
நிலவும் நட்சத்திரங்களும்
நமை கண்டு நகைக்க.....

அரும்புகள் கண்சிமிட்ட
இலைகளெல்லாம்
வீழ்கின்றன அடுத்தடுத்து.....

கண்களில் நேசம் கொண்டு
நீ எனை பருகும் இக்கணத்தில்
மெளனத்தின் பொருட்டு
இதழ் மூடியிருப்பின்
இம்மழைக்காலத்தின்
மாலைப்பொழுதில்
தப்பித்துக்கொள்வேன்
உன்னிடமிருந்து...