Friday, July 1, 2011

காலாதி காலங்களாய்....
பிரக்ஞையற்று திரிந்தலைந்த
கிரெளஞ்சப் பட்சியொன்று
மனவெளியில் தரையிறங்கியது
மிச்சமிருக்கும் வதைகளின் பொருட்டு
தீரா வேட்கையுடன் உயிர்த்தலின்
ஆதாரத்தை அலைகிழிக்கின்றது
கூர்ந்த நகங்களால்....

காலாதி காலங்களாய்
தொடர்ந்த மெளனம்
களைந்தெறிந்து
ஊழியின் உருவமாய்
மெய் சிவந்து நின்றேன்
எதிர்கொள்ளவியலாது
சிறகின் தூவிகள் பொசுங்க
ரத்தமும் மாம்சமும் கருக
வெந்தொழிந்தது.....

நன்றி : திண்ணை

Monday, May 2, 2011

பிரியம் சுமக்கும் சொற்களால்..... (பகுதி2)பிரியம் சுமக்கும் சொற்கள்

கொண்டு உனக்காய்

வடிப்பேன் ஒரு கவிதை....

மெளனக்கிடங்கில் மறைக்கப்பட்ட

மனதின் மென்மைகளை

அதில் பொதித்து

நீ அண்மிக்கையில்

பரிசளிப்பேன்

வெட்கம் குமிழ் குமிழாய்

உடைத்தபடி......

உன் நயன பாஷைகள் கண்டு

அந்தரங்கத்தில் மலரும்

சித்திரங்களின் மொழி

நானறிவேன்.....

மென்று விழுங்கும்

பார்வையுடன் நீ

என் முன் நிற்க

எல்லாம் புரிந்தும்

ஏதுமறியாச் சிறுமியாய்

நான் நிற்பேன்....

மறுதலிக்கப்படும் அன்பின் வலி

என்றும் நான் உணராதிருக்கவேண்டும்

என பிரார்த்தித்துக்கொண்டே.....


நன்றி : திண்ணை

Monday, April 4, 2011

பிரியம் பொதிந்த சொற்களால்......


நித்திலப்புன்னகை சுடர் வீசிட
எனை நித்தமும் கொஞ்சிடும்
சித்திரப்பூவே.....


கருத்தொருமித்த காதலின்
பரிசாய் என் கருவறையில்
கனிந்திட்ட கனியமுதே....

நின் முகத்தினெழிலிங்கு இயம்பிட
முயன்று முத்தமிழும் தோற்றிட்ட
அற்றைய பொழுதில் அகமகிழ்ந்தேன்.....

மெல்லிதழாலும் பூங்கரத்தாலும்
இன்பப்பொழினிடையில்
உயிரினமுதம் பொழிகையில்
என் சிந்தை திறை கொடுத்தேன்....

என் புலன் வருத்தி இப்புவியில்
நீ பாதம் பதித்த இந்நாளில்
நமையாளும் ஈசனிடம்
நலம் பல உனை சார்ந்திட
நல்லருள் செய வேண்டுகிறேன்....

இன்று என் இளைய மகன் கார்த்திகேயனின் பிறந்த நாள்
வாழ்த்துங்கள் நண்பர்களே ........

Wednesday, March 9, 2011

நீளும் இகற்போர்...


.

சிநேகத்தின் வேர்கள்
கருகுவதை கண்டு
உயிர்ப்பின் தாளலயம்
ஸ்வரம் தப்பிடும்...

நிகழ்கால நிஜத்திற்கும்
இறந்தகால நிழலிற்கும்
நடுவே மனம்
வெகுவாய் அலைப்புறும்....

பொய் என தெரிந்தும்
மெய் அன்பின் வாசனையை
விரும்பும்....

இனம்புரியா ஏதோ ஒரு
உணர்விழைநெய்யப்படுவதும்
நெய்யப்பட்டஅம்மாயத்திரை
சிதறடிக்கபடுவதுமாய்
நீளும் இகற்போரில்
என் நெஞ்சம் துவளும்...

Monday, February 7, 2011

தனிமையில் அழல்.....


இது காறும் என் உலகில்
இது போன்ற நிகழ்வுகளே அதிகம்....

என் அன்பு அற்பமாகவும்
என் அக்கறை அவமதிப்பாகவும்
என் நேசம் வேஷமாகவும்
என் பாசம் பைத்தியக்காரத்தனமாகவும்....
என் கருத்துகள் கர்வத்தின் வெளிப்பாடாகவும்
உங்களுக்கு தோன்றிடலாம்....

அவரவர் உலகம்
அவரவர்க்கான கோணங்களில்
அவரவர்க்காய்......

உங்களுக்கான பாதையில்
உங்களின் நடையை
நான் எப்போதும்
தடுக்கப்போவதேயில்லை.....

என் வீட்டு தோட்டத்தில்
என் கரம் பிடித்து நடக்க
காத்திருக்கும் இரு சிறு
வண்ண மலர்களின்
ஸ்பரிசம் போதும் எனக்கு
விட்டுவிடுங்கள் தயை கூர்ந்து
விலகிச்செல்லுங்கள்.......