Saturday, May 30, 2009

உனக்கான என் கவிதை....


எனக்கான கவிதை
எங்கென
எனைக்கேட்கும்
என்னவனே...

உனக்கான கவிதை
கற்பனையில் உதித்து
காகிதத்திலா எழுதப்படும்??

என் மருளும் கண்களுக்குள்
உருளும் கண்மணிகள் சொல்லும்
உனக்கான என் கவிதையை....

உனை தொட்டும் தொடாமலும்
பட்டும் படாமலும் வருடிச் செல்லும்
என் வெப்பமூச்சுக்காற்று சொல்லிடும்
உனக்கான என் கவிதையை....

நிலா கள் ஊற்றும்
நள்ளிரவில்
காற்றில் அலைந்து திரியும்
என் கைகளுனை காணாது
கண்ணீர் விடும்....

மனம் லட்ச லட்சமான
சிக்கலில் பின்னிக்கொள்ளும்
உணர்வுகளின் இயக்கம் அறுந்து போகும்
எனை மெளனத்திற்குள்
புதைத்து கொள்ளத் தோன்றும்
உன் நினைவுகளில்
பல மின்னல் மனதிற்குள் மின்ன...

காதலெனும் கனமழைக்குள் சிக்கி
கரைந்து கரைந்து
காணாமல் போகின்றேனே இது கூட
காதல் கவிதை தானே....

என் இன்னுயிரே
உனை கண்டதும்
வெடித்த கொடிப்பூவாய்
உன்னில் படர்ந்து
விக்கித்து விதிர்த்து
வியர்த்து போகின்றேனே
விளங்கிடவில்லையா
இந்த நொடி
காதலாய் கவிதையாய் உனக்கு....

இதற்கு மேல்
இதை விளக்கிட
இனி வார்த்தையொன்றுமில்லை எனக்கு...

Tuesday, May 26, 2009

சக்தியின் மறுபக்கம்.....


1 . உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது? உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா ?

சக்தி என் கணவரின் பெயர் +எங்கள் நிறுவனங்களின் பெயரும் கூட

பெயரை சொல்லும் போதே சக்தி வருதில்லை!!!! அதனால் எனக்கும் இந்த பெயர் .......

பிடிக்கும்பா..... என் நிஜப்பெயர் தமிழ்செல்வி



2.கடைசியாக அழுதது எப்பொழுது?

கடந்த செவ்வாய் மாமனாரின் மறைவன்று!!!!!



3.உங்களோட கையெழுத்து உங்களுக்கு பிடிக்குமா?

ரொம்ப ரொம்ப பிடிக்கும். கட்டுரை போட்டிகளில் சில பரிசகள் வாங்கி

இருக்கேன் என் கையெழுத்துக்காகவே!!!!!



4).பிடித்த மதிய உணவு என்ன?

பள்ளி நாட்களில் ஒரு 20 பேர் ஒன்றாய் அமர்ந்து உணவருந்தி இருக்கின்றோம்

இன்றும் மனதில் அதன் சுவை என்றும் இனி வராது

அம்மாவின் கைமணத்தில் அத்தையின் கைமணத்தில் எதுவாயிருந்தாலும்

ரொம்ப ரொம்ப பிடித்தம் பிரியாணி,மீன்குழம்பு.

நீங்க சமைக்கமாட்டீங்களானு கேட்பது காதில் விழுகின்றது

சமையலறைக்கு நான் சாப்பிட மட்டுமே போவது வழக்கம்

மீறி சென்றாலும் அம்மா தாயே வேண்டாம் இந்த விஷப் பரீட்சைன்னு

என்னை துரத்திவிட்டுடறாங்க



5.நீங்கள் வேறு யாருடனாவது உங்களோட நட்பை உடனே வச்சுக்குவீங்களா?

என் மனம் பொறுத்து என் ஆழ்மனத்தின் குரல் கேட்டு நடப்பவள் நான்

என் மனம் சரி என்றால் எனக்கு நண்பர் தான்



6.கடலில் குளிக்க பிடிக்குமா....அருவியில் குளிக்க பிடிக்குமா?

குற்றால அருவி ரொம்ப பிடித்தம், வருடா வருடம் என் உறவினர் படை சூழ

குறைந்த்து 50 பேர் அங்கு படையெடுப்பது வழமை



7.முதலில் ஒருவரைப் பார்க்கும் போது எதை கவனிப்பீர்கள்?

கண், முகம்,



8.உங்க கிட்ட உங்களுக்கு பிடிச்ச விஷயம் என்ன? பிடிக்காத விஷயம் என்ன ?

பிடிச்ச விஷயம்:என் சிரிப்பு,தன்னம்பிக்கை, தப்பு யார் செய்திருந்தாலும் தட்டி கேட்கும் தைரியம்

பிடிக்காத விஷயம் :என் முன்கோபம், சோம்பேறித்தனம், நல்லா வாயை

குடுத்து வாங்கி கட்டிக்கிறது என பல இருக்கின்றது




9.உங்க சரி பாதி கிட்ட உங்களுக்கு பிடித்த பிடிக்காத விசயம் எது?

பிடித்தவிசயம்: பொறுமை, தயாள குணம்,

என் மேல் வைத்திருக்கும் நேசம்

எல்லையற்ற நம்பிக்கை,பாசம் etc etc...

பிடிக்காத விசயம்:அவர் கோபம்,அதீத தயாளம்



10.யார் பக்கத்துல இல்லாம இருக்குறதுக்கு வருந்துகிறீர்கள் ?

உடன் பிறந்த, உடன்பிறவா சகோதரர்கள்

5 அண்ணா தம்பிகளுக்கு நடுவில் ஓரே பெண் அதனால் ரொம்ப செல்லம்

(now a days i miss them a lot)

சில வயது மூத்த அண்ணாக்களை பேர் சொல்லி கூட அழைத்தது இல்லை

வாடா போடா தான் அவ்வளவு மரியாதை அவர்கள் மேல்



11.இதை எழுதும் போது என்ன வர்ண ஆடை அணிந்து உள்ளீர்கள் ?

ஆகாய வர்ண ஷிபான் புடவை



12.என்ன பார்த்து//கேட்டுக் கொண்டு இருக்குறீங்க ?

இளையராஜாவின் ஹிட்ஸ்



13.வர்ணப் பேனாக்களாக உங்களை மாற்றினால் என்ன வர்ணமாக உங்களுக்கு ஆசை?

ரோஸ்,அடர்சிவப்பு



14.பிடித்த மணம்?

புதிதாய் பிறந்த குழந்தையின் நறுமணம்,

ஜான்சன்ஸ் பேபி சோப், பேபி லோஷன் +

இவை எல்லாம் கலோரி அதிகம் என்பதால் வாசம் பிடிப்பதோடு சரி

குலோப் ஜாமூன், கிருஷ்ணா ஸ்வீட்ஸ் மைசூர்பா,பால்கோவா



15.நீங்க அழைக்கப் போகும் பதிவரிடம் உங்களுக்கு பிடித்த விஷயம். அவரை அழைக்கக் காரணம் என்ன ?

வினோத் ,பாலா,சஞ்சய காந்தி வித்தியாசமான பதிவர்கள்



16.உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவில் உங்களுக்குப் பிடித்த பதிவு ?

காயத்ரியின் காதல் கவிதைகள் அனைத்துமே அழகு

வசந்தின் பதிவு வியக்கவைக்கும் அந்த கொசுவின் கதை அருமை



17. பிடித்த விளையாட்டு?

என் மகனுடன் விளையாடும் விளையாட்டுகள் அனைத்தும் பிடித்தம் + ஷட்டில்,

எனக்கு செல்லமாய் பி.டி.உஷா என்று பெயர் உள்ளது பள்ளி நாட்களில்

விளையாட்டுத்திடலில்

இப்பொழுது டிரெட்மில்லில்



18.கண்ணாடி அணிபவரா?

இல்லை ஆனால் அணிய வேண்டும் என்பது மருத்துவரின் ஆலோசனை



19.எப்படிப் பட்ட திரைப் படம் பிடிக்கும்?

பூ நான் மிக மிக ரசித்த படம் +

ஆட்டோகிராப் அதில் வரும் அருமையான பாடல்

ஒவ்வொரு பூக்களுமே என் மனம் தொய்வுரும் வேளையில்

நான் அதன் வரிகளை சொல்லிக்கொள்வேன்



20.கடைசியாகப் பார்த்த படம்?

அயன்



21.பிடித்த பருவ காலம் எது?

மார்கழி மாத குளிர் காலம்

இன்னமும் அந்த சிறு வயது ஞாபகம்

அம்மாவின் கைப்பிடித்து

அதிகாலை குளிரில்

விநாயகருக்கு நீருற்றியது

விநாயகரை என் நண்பராய் பாவித்து கதை பேசியது

என மார்கழியின் ஞாபகங்கள்

மனதோடு மழைக்காலம்



22)என்ன புத்தகம் படித்துக் கொண்டு இருக்கீங்க?

ஜென் கதைகள், ஈஷாவின் காட்டுப்பூ,சில கவிதை புத்தகங்கள்



23.உங்கள் டெஸ்க்டொப்-ல் இருக்கும் படத்தை எத்தனை நாளுக்கு ஒரு நாள் மாற்றுவீர்கள்?

அது என் மகன் பாலாஜியின் பொறுப்பு



24.பிடித்த சத்தம் ? பிடிக்காத சத்தம்?

பிடித்த சப்தம் :அம்மாக்களின் தாலாட்டு,என் மகன்களின் கொஞ்சல் சப்தம்

பிடிக்காதது :காட்டுக்கத்தலாய வரும் பாடல்கள்



25.வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக பட்ச தொலைவு?

சென்னை

26.உங்களுக்கு ஏதாவது தனித் திறமை இருக்கிறதா?

இது வரை ஒன்னும் இருக்கிற மாதிரி தெரியலை பா

ஆனால் நன்றாக கோலம் போடுவேன்

யாரும் எழுந்து ஓடாத அளவு பாடுவேன்


27.உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம்?

என்னை யாரும் சந்தேகித்தால் என்னால் ஏற்றுக்கொள்ளமுடியாது

ஒரு முறை என்னை சந்தேகித்தால் அதோடு அவர்களின் தொடர்பை அடியோடு

முறித்துகொள்வேன் அதன் பின் என்ன சமாதானம் கூறினாலும் என் மனம் ஒப்பாது



28.உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?

கர்வம்,ஆணவம்,திமிர் ஒழித்து விட முயல்கிறேன்

ஆனால் முடிவதில்லை



29.உங்களுக்கு பிடித்த சுற்றுலா தலம்?

கொடைகானல்,ஊட்டி



30.எப்படி இருக்கணும்னு ஆசை?

முடிந்த அளவு மற்றவர்க்கு உதவியாக

இல்லாவிட்டால் உபத்திரம் இல்லாத அளவு இருந்தால் போதும்



31.கணவர்(மனைவி) இல்லாம செய்ய விரும்பும் ஒரே காரியம் ?

அவர்க்கு தெரியாமல் எதையும் செய்ய விருப்பமில்லை



32)வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க?

மனதை செம்மைபடுத்து

மந்திரம் ஜெபிக்க தேவையில்லை

இந்த தொடர் பதிவுக்கு நான் அழைப்பது

சாய்ராபாலா,வினோத், சஞ்சய் காந்தி

Monday, May 25, 2009

என் கண்ணீரின் ஓசை


நிலமே உன்னில் அவர் பதித்த
பாதச்சுவடுகளை பத்திரமாய்
ஒளித்துவை இனி அவைகளை
மீண்டும் நான் காணப்போவதேயில்லை

ஹே காற்றே அவரின் கடைசி சுவாசக்காற்றை
எங்கு ஓளித்துவைத்திருக்கின்றாய்
சொல்லிவிட்டு போயேன்

செந்தீயே நீ அவர் தேகம்
தின்றழித்தபோழ்து வலித்ததா
அவரின் வலிகளின் போது
எங்கள் பெயரை உச்சரித்தாரா???

எங்கோ அலைந்து திரிந்து என் பாதம் வருடி செல்லும்
நதியின் சிற்றலையே எங்கே அடித்து செல்கின்றாய்
உன்னில் கரைத்துவிட்ட அவர் அங்கங்களை

ஆகாயமே உன்னிடம் தான் இருக்கிறாரா??
பத்திரமாய் பார்த்துகொள் அவரை
நான் அங்கு வருகின்ற நாள் வரை

இருக்கின்றபோது தெரிவதில்லை
இழந்தபின் இழப்பின் வலி
தெரிந்தும்பயனில்லை

பஞ்சபூதங்களில் கலந்துவிட்டீரா
இவை கண்டவர் விண்டதில்லை
விண்டவர் கண்டதில்லை
என்கின்றனர்

என்ன ஆறுதல் யார் கூறினாலும்
இதயத்தின் இடுக்குகளில்
இன்னமும் இருக்கின்றது வலி
எனக்குள் கண்ணீர் ஊறும் ஓசை
உங்கள் காதுகளில் கேட்கின்றதா???

பி.கு: சென்ற வாரம் எங்களை
விட்டு பிரிந்த மாமானாருக்கு
என் கண்ணீர் அஞ்சலி

Sunday, May 17, 2009

அப்பா எனும் அஸ்திவாரம் ....



அப்பா......
என் முதல் கதாநாயகன்
என் முதல் தோழன்
தடுமாறும் போது தோள் குடுத்து
தடம் மாறும் போது தட்டி கேட்கும்
என் தோழமை நீங்கள்

சமூகத்து சொல்லம்புகள்
எனை காயப்படுத்தும்போது
என்னை கேடயமாய் காத்தீர்

தாய்பாலுக்கு நிகராய்
தன்னம்பிக்கை ஊட்டி வளர்த்தீர்
சுயசிந்தனை சுயமரியாதை என
என் சிந்தனை விரிந்தது உங்களால்

நான் விழும்போது எனை
எழுப்ப நீளும் முதல் கரம்
தங்களுடையது

காதலுக்கும் இனக்கவர்ச்சிக்கும்
உள்ள வித்தியாசம் உங்களால்
எனக்கு பயிற்றுவிக்கப்பட்டது

எத்தனை பேருக்கு கிடைக்ககூடும்
இப்படி ஒரு தந்தை!!!!!!!!!!!!!!





வாழ்கையின் எனை நோக்கிவரும்
எல்லா இன்னலும் எதிர்க்கிறேன்
எனக்கு பின் என் அப்பா இருக்கிறார்
என தைரியத்தில்........

அம்மாவின் ஆன்மிக கருத்துக்களும்
உங்களின் கம்யூனிசமும் பெரியாரிசமும்
என் அறிவுக்கண்னை திறந்தது எனலாம்
புலம் பெயரும் வரை.......
மெத்தையில் நான் உறங்கியதை விட
உங்கள் மடியில் உறங்கியதே அதிகம்

இன்று கர்லானும் ட்யுராவிளக்சும்
எனக்கு உங்கள் அருகில் உறங்கிய
நிறைவை தருவதில்லை..

இறைமை என்றாவது என் முன் தோன்றினால்
நான் ஒரே ஒரு வரம் கேட்பேன்
மறுமையில் எனக்கு நம்பிக்கை இல்லை
இறையே அப்படி மறுபிறவி என ஒன்று இருப்பின்
என் அப்பாவுக்கே நான் மகளாக வேண்டும் என...

Friday, May 15, 2009

சத்தமிடாதே ....



அந்தகார இருளில் நான்
மூழ்கத்தொடங்குகையில்
ஆழ்மனதிலிருந்து ஒரு சில
அலறி எழுந்து கூப்பாடிடும்

என்னால் சத்தமிடக்கூடாது
என சமாதியாக்கப்பட்டவை அவை
எழுந்து அறைந்து அவைகளை கொன்று
எழும்பிய இடத்திற்கே திருப்பி அனுப்பிவிட்டு

சாளரங்களின்
வழியே விடியலுக்கான

வெளிச்சரேகைகளை
வெறித்துகொண்டே
வெற்றான
வெற்றிப்புன்னகையுடன்

விழிமூடுவேன்
விழித்தெழுகையில்

காய்ந்து நிற்கும்
கண்ணீர் திவலைகள்
காட்டிக்கொடுத்திடும்....

தோல்விகள் ....



ஒவ்வொரு முறையும்
என்க்குள் எழும்
வலிகளையும்
வேதனைகளையும்
விவரிக்க வார்த்தை
தேடி தொலைகிறேன்

எங்கோ படித்தவைகளின்
தாக்கமே எனக்குள்
புதிதாய் புகுத்த
முயல்கையில்

தோல்விகளும்
வெறுமைகளுமாய்
திரும்புகின்றது
வார்த்தைகளும்
என்னால்
கவிதை எனப்படுவதும்....

Wednesday, May 13, 2009

என் தேவன் ...



இவன் என்னவன் என்
அருகில் இருக்கவே விரும்புபவன்
அவ்வப்போது என்னை கட்டிபிடிப்பான்

எதிர்த்து பேசினால் எட்டி உதைப்பான்
கோவத்தில் கன்னம் கடிப்பான்
காதுக்குள் ரகசியம் பேசுவான்
முத்தமழையில் மூச்சுதிணறடிப்பான்

நான் அவனுக்கு மட்டுமே சொந்தமாம்
அதிகாரபூர்வமாய் அறிவிக்கின்றான்
யாருக்கும் என்னை தரமாட்டானாம்
எதோச்சதிகாரம் பேசுகின்றான்

பூமின்னலடிக்கும் புன்னகைக்காரன்
குறுகுறு பார்வையில் என் மனதை
கொள்ளையடிக்கும் வீரன்

வெடித்து சிதறும் என் கோவம்
அவன் சிரிப்பை கண்டால்
சிதறி சின்னாபின்னமாகும்

அவன் அழைப்பை கேட்டால்
திளைப்பு தோன்றும்
இவனுக்காய் கண் விழித்தால் என்
கருவிழிகள் களைப்படைவதில்லை

இனியேனும் நெற்றிக் கண்ணை திறந்துவிடு....




ஆன்மிகம் எனும்
ஆனந்தபிரவாகத்தில் எனை
கரைக்க மனம் விருப்பியது

திருவண்ணாமலைக்கு இந்த
வீட்டுபுறா தன் சிறகை விரித்தது
அண்ணாமலையாரை கண்டது
உண்ணாமுலையம்மையை கண்டது

வெள்ளிநிலவின்
பொன்னிற இழைகளுடன்
இறைவனின் அருட்கதிர்களையும்
பெற்றுகொண்டே வீடேகினேன்

ஆனால் அங்கு கண்ட சில காட்சிகள்
என் மனதை சிதைத்தது
ஆண்டவனுக்கும் அசையாத
ஆர்பாட்ட சக்திகள்

ஆன்மிகஅற்புத உலகில்
போலி சிம்மாசனமிட்டு சிலதுகள்
தங்களை தேவதூதர்களாய்
பிரஸ்தபித்துக்கொண்டிருந்ததுகள்










பிஞ்சுகுழந்தைகளை
பள்ளி செல்லவேண்டிய
பசுந்தளிர்களை கேவலம்
பிச்சை எடுப்பதற்காய் பலதுகள்
பாடாய்படுத்திக்கொண்டிருந்த்ததுகள்

அதிலும் 6 வயது மதிக்கத்தக்க‌
பச்சைமண்ணை முட்படுக்கை மேல்
படுக்கவைத்திருந்தான் ஓரு மூடப்பதர் என்
அத்தனை லட்சம் நரம்புகளும்
அதை கண்டு கண்ணீர் விட்டது

எதிர்த்துகேட்க துணிச்சலில்லை
வாய்மூடி மெளனியாய் திரும்பினேன்

இறைவா உன் பாடுதேவலாம்
கண்மூடி கல்லாய் கடவுளாய்
கண்முன் நடக்கும் அக்கிரமங்களை
காணாது அமர்ந்துவிட்டாய்....

Monday, May 11, 2009

நெஞ்சு பொறுக்குதில்லையே....


அண்ணாவும் பெரியாரும்
அறிவு ஊட்டி வளர்த்த கட்சிகள்

இன்று கரன்சி கொண்டும்
குத்துப்பாடல் கொண்டும்
வளர்க்கப்படும் வேதனை
காணசகியாது எழுதுகின்றேன்

வாக்களிக்கும் முன் யோசியுங்கள்

தமிழினம் தமிழினம் என
நம் தலையறுத்த கட்சிகளின்
முரண்பாடுகளை மனதில்
வைத்து வாக்களியுங்கள்

எவனோ ஒருவனின் மகுடத்திற்காய்
எத்தனை பேரின் தாலிகள் பறிக்கப்பட்டது
என நினைந்து வாக்களியுங்கள்

வாங்கிய கவர்களுக்கு
விசுவாசம் வேண்டாம்
எல்லாம் எவர் வீட்டு பணமுமல்ல‌
எல்லாம் நம்மிடமிருந்து
கொள்ளையடிக்கப்பட்டதே

உங்கள் விரல்களில் வைக்கும்
மைப்புள்ளி அக்கிரமத்திற்கு
முற்றுப்புள்ளியாகட்டும்

நாட்டுக்குள்ளேயே நாடுகடத்துவோம்
சாதிவெறி பிடித்த சர்பங்களை

நமை வைத்தே நமை அழிக்கும்
நச்சுகளின் கொட்டத்தை அடக்குவதாய்
இருக்கட்டும் உங்கள் வாக்குகள்.

Saturday, May 9, 2009

அவளின்றி ஒரு அணுவும் அசையாது...




அற்புதங்களின் பிறப்பிடம்
அன்னையின் இருப்பிடம்
அவளால் ஆரம்பித்துவைக்கப்பட்ட பயணமிது
அவளால் ஏற்றப்பட்ட உயிர்தீயிது
அவள் உயிர்குடித்து வளர்த்த உடலிது

அறுதியிட முடியாத அன்பின் ரூபமது
ஆழி தோற்க்கும் அவள் அன்பின் ஆழம் கண்டு
சந்ததிகள் வேர்விடுவதற்காய்
சங்கடங்கள் பல‌ சகித்தவள் அவள

மத்திய தர பெண்கள் பலரின்
விரதத்தின் மெய்ப்பொருள்அறிவீர்களா?
பிள்ளைகள் உண்டு மிச்சம்மிருப்பின் உண்பதே!!!!!
எத்தனையோ நாட்கள்
எங்களுக்காய் விரதமிருந்தவள் அவள்

நாங்கள் திரும்ப சிறிதே தாமதித்தாலும்
மணியிழந்த அரவாய் மதியிழந்த
வானாய் அவளின் கலக்கம்
நான் மக்கிப்போய்விட‌ இருந்தபோது
உயிர் உரம் இட்டவள் அவள்

அவள் வலி நான் உணர்ந்தபோது
உணர்ந்தேன் அவள் அருமை
நாம் எத்தனை முறை காயப்படுத்தினாலும்
நமை தொடரும் அவள் ஆசிகள்

என் முதல் தாலாட்டு அவள்
இதயத்து நுண்ணொலி
கருவாய் 45 நாட்களில் ஒலிக்கத்துடங்கிய
என் இதயத்தொலி இன்றும் உன் காதுகளில்.........

உன் அன்பு வலை பின்னலில் சிக்கி கொண்டு
என்றுமே வெளிவரக்கூடாது நான்......

பாரிஜாத தேவவிருட்சங்களும்
கற்பகத் தருக்களும் நான் நிஜத்தில்
கண்டதில்லை எனக்கு அவை
தேவையும் இல்லை நீ இருக்கும் போது....

(அனைவருக்கும் அன்னையர்தின நல்வாழ்த்துக்கள்)

Wednesday, May 6, 2009

நீ திரும்பி செல்கையில்....




உன் தோள் சாய்ந்த
கதகதப்பில் சுகமான
தென்றல் இனி வாட்டும்...

உன் வீழியீர்ப்பு விசையில்
விழுந்தவள் எழும் முன்
விலகிச்செல்கின்றாய்...

நேசமாய் கேசம் புகுந்து
கோதிக்குடுத்த உன் விரல்கள்...

மொய்குழல் விலக்கி
முத்தமிட்ட நின் இதழ்கள்...

என் ஞாபகப் பெட்டகத்துள்
நினைவுப் பொக்கிஷங்களாய்...

உனக்கான காத்திருப்பு
என்னில் தொடங்கி இனி
எல்லையின்றி நீளும்...

உன்னால்
வேரறுக்கப்பட்ட
வேதனைகள் இனி
தலை தூக்கும் தன்னால்...

Tuesday, May 5, 2009

என் மனதின் குரல் ...



எதையோ சாதித்து விட்டதாய்
தருக்கி திரிந்த எனை
என் மனம் கேட்டது
எதை சாதித்தாய்?

டிபார்மெண்ட் ஸ்டோர்களில்
கிரெடிட் கார்டை நீட்டிய நீ
கீரைக்காரியிடம் ஒற்றை ரூபாய்க்கு
சண்டையிட்டு தயாளம் பற்றிபேசுவாய்

பல உயிர்களை புசித்து
உடல் வளர்த்து ஜீவகாருண்யம் பற்றி
பேசும் உனை என் செய்வது

கூட்டுக்குடும்பத்தை குலைக்க
நினைக்கும் மனதை வைத்து
கொண்டு ஒற்றுமை
பற்றி கதையளக்கிறாய்

அழகிய நாட்களை
அகங்காரத்தால் இழந்திருக்கிறாய்
ஆணவத்துடன் திமிர்ந்திருக்கிறாய்

கசப்பான உணர்வுகளை
தின்று தின்று இறுகிய மனம்
சிரிப்பை தொலைத்த முகம்

முப்பதில் ஒயத்துடிக்கும்
ஜலெட்ஸ் ஆப் லான்கர்ஹான்ஸ்[கணையம்]
கொதிக்கும் குருதி

ஜம்பதில் அடங்கிவிடுவேன் என
அபாய மணியடிக்கும்
ரத்தமிறைக்கும் இயந்திரம்

இவைகளே உன் சாதனை என்றது
என் மனம் மறுபேச்சின்றி
தலை குனிந்தேன்....

Sunday, May 3, 2009

உனக்கான ராஜபாட்டையில் நீ நட‌...




காதல் ஆழம் காண முடியாத
கடல் அதில் மூழ்கி
முத்தெடுப்பவர் சிலர்
மூச்சை தொலைத்தவர் பலர்

காதலின் கைப்பிடியில் சிக்கி
கவிதை எழுதி தாடி வளர்த்து
குவார்டர் அடித்து என்ன இது????

எடுத்தெறி நம்மை
ஏமாற்றும் இந்த
கொடிய காதலை

காதல் மயில் பீலி சாமரம் வீசி
ரோஜா பூச்செண்டு
தந்து உனை வரவேற்குமா
இல்லை உன் பாதையில் முட்கள்
தூவுமோ யாரறிவர்

நீ வானத்து வீண்மீன்களுக்காய்
கண்ணை வானில் வைத்து நடந்தால்
பூமியில் இருக்கும் புதைகுழிக்குள்
சிக்கிக்கொள்வாய்

இந்த வாழ்வு எனும் மாயையில்
காதலும் ஒரு பக்கம் என்க‌
அது கைகூடாவிட்டால்
கிழித்தெறி அந்த நைந்த பக்கத்தை

உனக்கான ராஜபாட்டையில் நீ நட‌
ராணிகள் வருவர் தானாக....

[பி .கு] காதல் கவிஞர்கள் மன்னிப்பார்களாக.

Saturday, May 2, 2009

மானுடம் உய்ய வா மழையே !!!!



காடுகளை அழித்தும்
கார்பன்களை உதிர்த்தும்
உனை அவ்வப்போது குறையாய்
பிரசவிக்கவைத்தோம்...





நதியில் நான் துளைந்து
விளையாடிய நன்னீர்
இன்று பாட்டிலில்
விற்பனைக்காய்...





நிறைசூல் கொண்டு நீ
நடந்ததை நானறிவேன்
உன்னால் கைவிடப்பட்ட‌
என் கரிசல் காடுகளின்
கதறச்சிதறல்கள் என் காதுகளில் ...





ஆற்றின் நகைப்பும் அருவியின் சலசலப்பும்
மீண்டும் வேண்டும் எனவேண்டுகிறேன்
உன்னிடம் உனை மலடாக்கிய‌
கூட்டத்தில் நானும் குற்றவாளியாய்....

விகடனில் எனது பதிவு


நண்பர்களுக்கு வணக்கம்
இன்று விகடனில்
எனது தோழி தமிழரசி அவர்கள்
எனது மதிப்பிற்குறிய கவிஞர் முத்துராமலிங்கம் அவர்கள்
ஆகியோருடன் எனது கவிதையும் வெளியாகியுள்ளது
என்பதை உங்களிடம் மகிழ்வுடன் பகிர்கின்றேன்
இது விகடனில் எனது நான்காவது பதிவு
நன்றி வலைப்பூ அன்பர்களே...
http://youthful.vikatan.com/youth/index.asp

Friday, May 1, 2009

கொங்கு காதல்....





எப்பவும் எனை நினைச்சு
கிறக்கப் பார்வை பார்க்கும்
எளந்தாரிப் பயபுள்ளை
உன்னை தவிர ஒரு பயலும்
என் மனசிலே தான் இல்லை

உனக்கான பாதையிலே
மல்லிகைபூ தூவி வைச்சேன்
உன்னோட வாழ தானே
கோவிலிலே நேர்சை வைச்சேன்

உன்னோட நான் நடந்தா
வெக்கை கூட குளிருதய்யா
நீ இல்லாத போது நிலவும்
கேலி செய்யுதய்யா
அது நிழலிலே தான் என் மேனி
கருக்குதய்யா....

***************************************************

பத்து வயசு நானிருப்பேனா
பக்கம் வந்து பஞ்சுபொதியா
உன்னை தந்து பக்குவமா சொன்னாக
அத்தை பொண்ணு அழகை பாருன்னு அப்பவா

சிற்றாடையா பட்டாடைய
கட்டி பக்கம் வந்து
பார்த்தும் பாக்காது போனியே அப்பவா

பருவத்து வாசலிலே தாவணி அணிஞ்சு
பச்சையோலைக்குள்ளே புகுந்து
கள்ளப் பார்வை பாத்தியே அப்பவா

மாராப்பு சேலையுள்ளே
என் மனசே முடிஞ்சுகிட்டு
வரப்போரம் போர புள்ளே

சொல்லிப்புட்டு போ புள்ளே
எப்போ என் மனசுக்குள்ளே நீ நுழைஞ்சே
சொந்தக்கார மாமன் புள்ளே...

பி.கு: நண்பர்களே சங்க காலப் பாடல்
மூலம் சொன்ன காதல்
இப்போ கொங்கு தமிழில்
(எங்கள் வட்டார மொழி)