Saturday, May 30, 2009

உனக்கான என் கவிதை....


எனக்கான கவிதை
எங்கென
எனைக்கேட்கும்
என்னவனே...

உனக்கான கவிதை
கற்பனையில் உதித்து
காகிதத்திலா எழுதப்படும்??

என் மருளும் கண்களுக்குள்
உருளும் கண்மணிகள் சொல்லும்
உனக்கான என் கவிதையை....

உனை தொட்டும் தொடாமலும்
பட்டும் படாமலும் வருடிச் செல்லும்
என் வெப்பமூச்சுக்காற்று சொல்லிடும்
உனக்கான என் கவிதையை....

நிலா கள் ஊற்றும்
நள்ளிரவில்
காற்றில் அலைந்து திரியும்
என் கைகளுனை காணாது
கண்ணீர் விடும்....

மனம் லட்ச லட்சமான
சிக்கலில் பின்னிக்கொள்ளும்
உணர்வுகளின் இயக்கம் அறுந்து போகும்
எனை மெளனத்திற்குள்
புதைத்து கொள்ளத் தோன்றும்
உன் நினைவுகளில்
பல மின்னல் மனதிற்குள் மின்ன...

காதலெனும் கனமழைக்குள் சிக்கி
கரைந்து கரைந்து
காணாமல் போகின்றேனே இது கூட
காதல் கவிதை தானே....

என் இன்னுயிரே
உனை கண்டதும்
வெடித்த கொடிப்பூவாய்
உன்னில் படர்ந்து
விக்கித்து விதிர்த்து
வியர்த்து போகின்றேனே
விளங்கிடவில்லையா
இந்த நொடி
காதலாய் கவிதையாய் உனக்கு....

இதற்கு மேல்
இதை விளக்கிட
இனி வார்த்தையொன்றுமில்லை எனக்கு...

Tuesday, May 26, 2009

சக்தியின் மறுபக்கம்.....


1 . உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது? உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா ?

சக்தி என் கணவரின் பெயர் +எங்கள் நிறுவனங்களின் பெயரும் கூட

பெயரை சொல்லும் போதே சக்தி வருதில்லை!!!! அதனால் எனக்கும் இந்த பெயர் .......

பிடிக்கும்பா..... என் நிஜப்பெயர் தமிழ்செல்வி



2.கடைசியாக அழுதது எப்பொழுது?

கடந்த செவ்வாய் மாமனாரின் மறைவன்று!!!!!



3.உங்களோட கையெழுத்து உங்களுக்கு பிடிக்குமா?

ரொம்ப ரொம்ப பிடிக்கும். கட்டுரை போட்டிகளில் சில பரிசகள் வாங்கி

இருக்கேன் என் கையெழுத்துக்காகவே!!!!!



4).பிடித்த மதிய உணவு என்ன?

பள்ளி நாட்களில் ஒரு 20 பேர் ஒன்றாய் அமர்ந்து உணவருந்தி இருக்கின்றோம்

இன்றும் மனதில் அதன் சுவை என்றும் இனி வராது

அம்மாவின் கைமணத்தில் அத்தையின் கைமணத்தில் எதுவாயிருந்தாலும்

ரொம்ப ரொம்ப பிடித்தம் பிரியாணி,மீன்குழம்பு.

நீங்க சமைக்கமாட்டீங்களானு கேட்பது காதில் விழுகின்றது

சமையலறைக்கு நான் சாப்பிட மட்டுமே போவது வழக்கம்

மீறி சென்றாலும் அம்மா தாயே வேண்டாம் இந்த விஷப் பரீட்சைன்னு

என்னை துரத்திவிட்டுடறாங்க



5.நீங்கள் வேறு யாருடனாவது உங்களோட நட்பை உடனே வச்சுக்குவீங்களா?

என் மனம் பொறுத்து என் ஆழ்மனத்தின் குரல் கேட்டு நடப்பவள் நான்

என் மனம் சரி என்றால் எனக்கு நண்பர் தான்



6.கடலில் குளிக்க பிடிக்குமா....அருவியில் குளிக்க பிடிக்குமா?

குற்றால அருவி ரொம்ப பிடித்தம், வருடா வருடம் என் உறவினர் படை சூழ

குறைந்த்து 50 பேர் அங்கு படையெடுப்பது வழமை



7.முதலில் ஒருவரைப் பார்க்கும் போது எதை கவனிப்பீர்கள்?

கண், முகம்,



8.உங்க கிட்ட உங்களுக்கு பிடிச்ச விஷயம் என்ன? பிடிக்காத விஷயம் என்ன ?

பிடிச்ச விஷயம்:என் சிரிப்பு,தன்னம்பிக்கை, தப்பு யார் செய்திருந்தாலும் தட்டி கேட்கும் தைரியம்

பிடிக்காத விஷயம் :என் முன்கோபம், சோம்பேறித்தனம், நல்லா வாயை

குடுத்து வாங்கி கட்டிக்கிறது என பல இருக்கின்றது




9.உங்க சரி பாதி கிட்ட உங்களுக்கு பிடித்த பிடிக்காத விசயம் எது?

பிடித்தவிசயம்: பொறுமை, தயாள குணம்,

என் மேல் வைத்திருக்கும் நேசம்

எல்லையற்ற நம்பிக்கை,பாசம் etc etc...

பிடிக்காத விசயம்:அவர் கோபம்,அதீத தயாளம்



10.யார் பக்கத்துல இல்லாம இருக்குறதுக்கு வருந்துகிறீர்கள் ?

உடன் பிறந்த, உடன்பிறவா சகோதரர்கள்

5 அண்ணா தம்பிகளுக்கு நடுவில் ஓரே பெண் அதனால் ரொம்ப செல்லம்

(now a days i miss them a lot)

சில வயது மூத்த அண்ணாக்களை பேர் சொல்லி கூட அழைத்தது இல்லை

வாடா போடா தான் அவ்வளவு மரியாதை அவர்கள் மேல்



11.இதை எழுதும் போது என்ன வர்ண ஆடை அணிந்து உள்ளீர்கள் ?

ஆகாய வர்ண ஷிபான் புடவை



12.என்ன பார்த்து//கேட்டுக் கொண்டு இருக்குறீங்க ?

இளையராஜாவின் ஹிட்ஸ்



13.வர்ணப் பேனாக்களாக உங்களை மாற்றினால் என்ன வர்ணமாக உங்களுக்கு ஆசை?

ரோஸ்,அடர்சிவப்பு



14.பிடித்த மணம்?

புதிதாய் பிறந்த குழந்தையின் நறுமணம்,

ஜான்சன்ஸ் பேபி சோப், பேபி லோஷன் +

இவை எல்லாம் கலோரி அதிகம் என்பதால் வாசம் பிடிப்பதோடு சரி

குலோப் ஜாமூன், கிருஷ்ணா ஸ்வீட்ஸ் மைசூர்பா,பால்கோவா



15.நீங்க அழைக்கப் போகும் பதிவரிடம் உங்களுக்கு பிடித்த விஷயம். அவரை அழைக்கக் காரணம் என்ன ?

வினோத் ,பாலா,சஞ்சய காந்தி வித்தியாசமான பதிவர்கள்



16.உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவில் உங்களுக்குப் பிடித்த பதிவு ?

காயத்ரியின் காதல் கவிதைகள் அனைத்துமே அழகு

வசந்தின் பதிவு வியக்கவைக்கும் அந்த கொசுவின் கதை அருமை



17. பிடித்த விளையாட்டு?

என் மகனுடன் விளையாடும் விளையாட்டுகள் அனைத்தும் பிடித்தம் + ஷட்டில்,

எனக்கு செல்லமாய் பி.டி.உஷா என்று பெயர் உள்ளது பள்ளி நாட்களில்

விளையாட்டுத்திடலில்

இப்பொழுது டிரெட்மில்லில்



18.கண்ணாடி அணிபவரா?

இல்லை ஆனால் அணிய வேண்டும் என்பது மருத்துவரின் ஆலோசனை



19.எப்படிப் பட்ட திரைப் படம் பிடிக்கும்?

பூ நான் மிக மிக ரசித்த படம் +

ஆட்டோகிராப் அதில் வரும் அருமையான பாடல்

ஒவ்வொரு பூக்களுமே என் மனம் தொய்வுரும் வேளையில்

நான் அதன் வரிகளை சொல்லிக்கொள்வேன்



20.கடைசியாகப் பார்த்த படம்?

அயன்



21.பிடித்த பருவ காலம் எது?

மார்கழி மாத குளிர் காலம்

இன்னமும் அந்த சிறு வயது ஞாபகம்

அம்மாவின் கைப்பிடித்து

அதிகாலை குளிரில்

விநாயகருக்கு நீருற்றியது

விநாயகரை என் நண்பராய் பாவித்து கதை பேசியது

என மார்கழியின் ஞாபகங்கள்

மனதோடு மழைக்காலம்



22)என்ன புத்தகம் படித்துக் கொண்டு இருக்கீங்க?

ஜென் கதைகள், ஈஷாவின் காட்டுப்பூ,சில கவிதை புத்தகங்கள்



23.உங்கள் டெஸ்க்டொப்-ல் இருக்கும் படத்தை எத்தனை நாளுக்கு ஒரு நாள் மாற்றுவீர்கள்?

அது என் மகன் பாலாஜியின் பொறுப்பு



24.பிடித்த சத்தம் ? பிடிக்காத சத்தம்?

பிடித்த சப்தம் :அம்மாக்களின் தாலாட்டு,என் மகன்களின் கொஞ்சல் சப்தம்

பிடிக்காதது :காட்டுக்கத்தலாய வரும் பாடல்கள்



25.வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக பட்ச தொலைவு?

சென்னை

26.உங்களுக்கு ஏதாவது தனித் திறமை இருக்கிறதா?

இது வரை ஒன்னும் இருக்கிற மாதிரி தெரியலை பா

ஆனால் நன்றாக கோலம் போடுவேன்

யாரும் எழுந்து ஓடாத அளவு பாடுவேன்


27.உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம்?

என்னை யாரும் சந்தேகித்தால் என்னால் ஏற்றுக்கொள்ளமுடியாது

ஒரு முறை என்னை சந்தேகித்தால் அதோடு அவர்களின் தொடர்பை அடியோடு

முறித்துகொள்வேன் அதன் பின் என்ன சமாதானம் கூறினாலும் என் மனம் ஒப்பாது



28.உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?

கர்வம்,ஆணவம்,திமிர் ஒழித்து விட முயல்கிறேன்

ஆனால் முடிவதில்லை



29.உங்களுக்கு பிடித்த சுற்றுலா தலம்?

கொடைகானல்,ஊட்டி



30.எப்படி இருக்கணும்னு ஆசை?

முடிந்த அளவு மற்றவர்க்கு உதவியாக

இல்லாவிட்டால் உபத்திரம் இல்லாத அளவு இருந்தால் போதும்



31.கணவர்(மனைவி) இல்லாம செய்ய விரும்பும் ஒரே காரியம் ?

அவர்க்கு தெரியாமல் எதையும் செய்ய விருப்பமில்லை



32)வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க?

மனதை செம்மைபடுத்து

மந்திரம் ஜெபிக்க தேவையில்லை

இந்த தொடர் பதிவுக்கு நான் அழைப்பது

சாய்ராபாலா,வினோத், சஞ்சய் காந்தி

Monday, May 25, 2009

என் கண்ணீரின் ஓசை


நிலமே உன்னில் அவர் பதித்த
பாதச்சுவடுகளை பத்திரமாய்
ஒளித்துவை இனி அவைகளை
மீண்டும் நான் காணப்போவதேயில்லை

ஹே காற்றே அவரின் கடைசி சுவாசக்காற்றை
எங்கு ஓளித்துவைத்திருக்கின்றாய்
சொல்லிவிட்டு போயேன்

செந்தீயே நீ அவர் தேகம்
தின்றழித்தபோழ்து வலித்ததா
அவரின் வலிகளின் போது
எங்கள் பெயரை உச்சரித்தாரா???

எங்கோ அலைந்து திரிந்து என் பாதம் வருடி செல்லும்
நதியின் சிற்றலையே எங்கே அடித்து செல்கின்றாய்
உன்னில் கரைத்துவிட்ட அவர் அங்கங்களை

ஆகாயமே உன்னிடம் தான் இருக்கிறாரா??
பத்திரமாய் பார்த்துகொள் அவரை
நான் அங்கு வருகின்ற நாள் வரை

இருக்கின்றபோது தெரிவதில்லை
இழந்தபின் இழப்பின் வலி
தெரிந்தும்பயனில்லை

பஞ்சபூதங்களில் கலந்துவிட்டீரா
இவை கண்டவர் விண்டதில்லை
விண்டவர் கண்டதில்லை
என்கின்றனர்

என்ன ஆறுதல் யார் கூறினாலும்
இதயத்தின் இடுக்குகளில்
இன்னமும் இருக்கின்றது வலி
எனக்குள் கண்ணீர் ஊறும் ஓசை
உங்கள் காதுகளில் கேட்கின்றதா???

பி.கு: சென்ற வாரம் எங்களை
விட்டு பிரிந்த மாமானாருக்கு
என் கண்ணீர் அஞ்சலி

Sunday, May 17, 2009

அப்பா எனும் அஸ்திவாரம் ....



அப்பா......
என் முதல் கதாநாயகன்
என் முதல் தோழன்
தடுமாறும் போது தோள் குடுத்து
தடம் மாறும் போது தட்டி கேட்கும்
என் தோழமை நீங்கள்

சமூகத்து சொல்லம்புகள்
எனை காயப்படுத்தும்போது
என்னை கேடயமாய் காத்தீர்

தாய்பாலுக்கு நிகராய்
தன்னம்பிக்கை ஊட்டி வளர்த்தீர்
சுயசிந்தனை சுயமரியாதை என
என் சிந்தனை விரிந்தது உங்களால்

நான் விழும்போது எனை
எழுப்ப நீளும் முதல் கரம்
தங்களுடையது

காதலுக்கும் இனக்கவர்ச்சிக்கும்
உள்ள வித்தியாசம் உங்களால்
எனக்கு பயிற்றுவிக்கப்பட்டது

எத்தனை பேருக்கு கிடைக்ககூடும்
இப்படி ஒரு தந்தை!!!!!!!!!!!!!!





வாழ்கையின் எனை நோக்கிவரும்
எல்லா இன்னலும் எதிர்க்கிறேன்
எனக்கு பின் என் அப்பா இருக்கிறார்
என தைரியத்தில்........

அம்மாவின் ஆன்மிக கருத்துக்களும்
உங்களின் கம்யூனிசமும் பெரியாரிசமும்
என் அறிவுக்கண்னை திறந்தது எனலாம்
புலம் பெயரும் வரை.......
மெத்தையில் நான் உறங்கியதை விட
உங்கள் மடியில் உறங்கியதே அதிகம்

இன்று கர்லானும் ட்யுராவிளக்சும்
எனக்கு உங்கள் அருகில் உறங்கிய
நிறைவை தருவதில்லை..

இறைமை என்றாவது என் முன் தோன்றினால்
நான் ஒரே ஒரு வரம் கேட்பேன்
மறுமையில் எனக்கு நம்பிக்கை இல்லை
இறையே அப்படி மறுபிறவி என ஒன்று இருப்பின்
என் அப்பாவுக்கே நான் மகளாக வேண்டும் என...

Friday, May 15, 2009

சத்தமிடாதே ....



அந்தகார இருளில் நான்
மூழ்கத்தொடங்குகையில்
ஆழ்மனதிலிருந்து ஒரு சில
அலறி எழுந்து கூப்பாடிடும்

என்னால் சத்தமிடக்கூடாது
என சமாதியாக்கப்பட்டவை அவை
எழுந்து அறைந்து அவைகளை கொன்று
எழும்பிய இடத்திற்கே திருப்பி அனுப்பிவிட்டு

சாளரங்களின்
வழியே விடியலுக்கான

வெளிச்சரேகைகளை
வெறித்துகொண்டே
வெற்றான
வெற்றிப்புன்னகையுடன்

விழிமூடுவேன்
விழித்தெழுகையில்

காய்ந்து நிற்கும்
கண்ணீர் திவலைகள்
காட்டிக்கொடுத்திடும்....

தோல்விகள் ....



ஒவ்வொரு முறையும்
என்க்குள் எழும்
வலிகளையும்
வேதனைகளையும்
விவரிக்க வார்த்தை
தேடி தொலைகிறேன்

எங்கோ படித்தவைகளின்
தாக்கமே எனக்குள்
புதிதாய் புகுத்த
முயல்கையில்

தோல்விகளும்
வெறுமைகளுமாய்
திரும்புகின்றது
வார்த்தைகளும்
என்னால்
கவிதை எனப்படுவதும்....

Wednesday, May 13, 2009

என் தேவன் ...



இவன் என்னவன் என்
அருகில் இருக்கவே விரும்புபவன்
அவ்வப்போது என்னை கட்டிபிடிப்பான்

எதிர்த்து பேசினால் எட்டி உதைப்பான்
கோவத்தில் கன்னம் கடிப்பான்
காதுக்குள் ரகசியம் பேசுவான்
முத்தமழையில் மூச்சுதிணறடிப்பான்

நான் அவனுக்கு மட்டுமே சொந்தமாம்
அதிகாரபூர்வமாய் அறிவிக்கின்றான்
யாருக்கும் என்னை தரமாட்டானாம்
எதோச்சதிகாரம் பேசுகின்றான்

பூமின்னலடிக்கும் புன்னகைக்காரன்
குறுகுறு பார்வையில் என் மனதை
கொள்ளையடிக்கும் வீரன்

வெடித்து சிதறும் என் கோவம்
அவன் சிரிப்பை கண்டால்
சிதறி சின்னாபின்னமாகும்

அவன் அழைப்பை கேட்டால்
திளைப்பு தோன்றும்
இவனுக்காய் கண் விழித்தால் என்
கருவிழிகள் களைப்படைவதில்லை