Wednesday, December 19, 2012



விஷ்ணுபுரம் இலக்கியவட்டம் வழங்கும் 2012ம் ஆண்டிற்கான ”விஷ்ணுபுரம் விருது” கவிஞர் தேவதேவனுக்கு வழங்கப்படுகிறது , விருது வழங்கும் நிகழ்ச்சி டிசம்பர் 22 2012 சனிக்கிழமை மாலை 6 மணிக்குக் கோவையில் ஆர்.எஸ். புரம் மாநகராட்சி கலையரங்கில் நடைபெறுகிறது.

நிகழ்ச்சியில்
எழுத்தாளர் நாஞ்சில்நாடன்
ஜா.ராஜகோபாலன்
விமர்சகர் மோகனரங்கன்

இயக்குனர் சுகா
கல்பற்றா நாராயணன் (மலையாளமொழிக் கவிஞர்)


இசைஞானி இளையராஜா
எழுத்தாளர் ஜெயமோகன்
கவிஞர் தேவதேவன்

ஆகியோர் பங்கேற்கின்றனர்.
 ,நண்பர்கள் அனைவரையும் விழாவிற்கு அன்புடன் அழைக்கிறோம் .


 தேவதேவனின் அசல்பெயர் பிச்சுமணி கைவல்யம்
தேவதேவனின் பூர்வீக ஊர் கோவில்பட்டி அருகே இ.ராஜாகோயில்

தேவதேவனின் கவிதைத் துளிகள்.......


’தனிமைக் குளத்தில் இறங்கினான்

கொஞ்ச நேரத்தில் குஞ்சுமீன்கள்
கூட்டமாய் வந்து
மொய்த்தன தனிமையை’



’அசையும் போது தோணி

அசையாத போதே தீவு
தோணிக்கும் தீவுக்கும் இடையே
மின்னற் பொழுதே தூரம்’


’மோகம் ததும்பும் நீர்ப்பரப்பு

தீராவேட்கையில்
துள்ளி எழும் மீன் துடிப்பு
படக்கென்று நிறைவேறியதென்ன
லாவகமாய் கொத்திச்
சென்றது ஒரு பறவை
வானில் நீந்தி’
(குளித்து கரையேறாத கோபியர்கள்)

-- நீரில் மேற்பரப்பில் ஒரு மீன்

துள்ளி விழுகையில் கண்டது சுடும் பாறை
மீண்டும் துள்ளுகையில் பறவையின் கொடுங்கால்
மேலும் ஒரு துள்ளலில் மரணம்
மரித்த கணமே பறவை’
(துள்ளல்)



உனக்குப் புரிகிறதா இதெல்லாம்?
துள்ளுகிறதா உன் இதயம்?
அதுதான் காதல் என்பது

காதல் என்பது இனங் கண்டுகொள்ளல் அல்ல

காதல் என்பது காணுதல் ஆகும்
தனக்குள் இருக்கும் உன்னதத்தைத்
தான் கண்டுகொள்ளல், மற்றும்
என் உன்னதத்தை உன் உன்னதம்
அல்லது உன்னதை என்னது

பிறிதெது வொன்றும் காதல் ஆகாது
.....



இலக்கிய வட்டம் ஏராளமானவை இங்கிருந்தாலும் சில சமயம் அவை மிகச்சிறந்த எழுத்தாளர்களை கெளரவம் செய்வதை மனம் நிறைந்து பாராட்ட வேண்டியது நம் கடமை ... 
கவிஞர் தேவதேவன் தமிழ்க்கவியுலகில் ஆகச்சிறந்த கவிஞரில் முதன்மையானவர்... அவருக்கான பாராட்டுவிழாவில் அனைவரும் கலந்து கொண்டு சிற்ப்பிக்கவேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.....

 

Saturday, June 16, 2012

என்ன தவம் செய்தனை !!!!

கார்த்திக் நேற்று இரவு பேனாவும் பேப்பருமாக அமர்ந்து ஏதோ எழுதிக்கொண்டிருந்தான் . என்ன தங்கம் எழுதறே என கேட்டதுக்கு உனக்கு தான் மா எழுதறேன்னு சொன்னான். அப்படியா என்ன எழுதறேன்னதும். கவிதை மா என்றான்.
பயங்கர அதிர்ச்சியா இருந்தது அதுக்குள்ளயா????? அப்படின்னு அதிர்ச்சியோட சரி நீ என்ன எழுதியிருக்கே படிச்சி காட்டு என்றேன்....

அம்மா உன்னிய எனக்கு நெம்ப பிடிக்கும்
உன் பக்கத்துல நான் எப்பவும் இருக்கணும் அம்மா
உன் கழுத்தை கட்டிப்பிடிச்சுட்டே நான் தூங்கணும்
உன் மடியில எப்பவும் நான் தான் உட்கார்ந்துக்கணும்
நீ நான் கேட்கறது எல்லாம் வாங்கி குடுக்கறே அம்மா
நீ ரொம்ப நல்ல அம்மா

ஆனால் இந்த பாலாஜி இருக்கானே அவன் ஒரு லூசு மா
அவனுக்கு அப்பாவை தான் பிடிக்குமாம்.
அவன் அப்பாவை போய் கட்டிப்பிடிச்சுட்டு தூங்கறான் மா
அவனுக்கு உன்னை விட அப்பாவை தான் பிடிக்கும்ங்கறான் மா

எல்லாம் சரி மா ஆனால் நீ அப்போ அப்போ அடிக்கறே
அது மட்டும் எனக்கு பிடிக்கல அப்போ உன்னிய
அப்பாகிட்ட சொல்லி அடி வாங்கி குடுக்கணும் போல இருக்கு

இதான் எங்க வீட்டு வாலு எனக்கு எழுதின கவிதை ??????

::)))))

இப்பவே இப்படின்னா பின்னாட்களில் எப்படியோ!!!!!!!!!!!!!!!!


( முன்பு கூகிள் பஸ் ல எழுதியது )

Tuesday, April 24, 2012

நிர்பந்தங்களின் தீப்பந்தங்களால்....




திரிபு வார்த்தைகளும்
தத்துவார்த்த பிழைகளும்
தின்மச் சொற்களும்
தந்த ரணங்களை சுமந்து
இடர் சூழ்ந்த இவ்வுலகில்
பொருள் தேடி அலைகிறேன்....

துயரம் சொல்லொணாத் 
தவிப்புடன் உடல் நிறைக்க
இறுகிப்போன சக்கையாய் மனம்....

நிர்பந்தங்களின் தீப்பந்தங்களால்
தன்னந்தனியாய் தவிக்கும் 
அழுகையின் நிறம்
மீளாத்துயருடன்
பின் தொடரும் நிழலாய்
நினைவுதிர்த்து போகின்றது.....

Friday, July 1, 2011

காலாதி காலங்களாய்....




பிரக்ஞையற்று திரிந்தலைந்த
கிரெளஞ்சப் பட்சியொன்று
மனவெளியில் தரையிறங்கியது
மிச்சமிருக்கும் வதைகளின் பொருட்டு
தீரா வேட்கையுடன் உயிர்த்தலின்
ஆதாரத்தை அலைகிழிக்கின்றது
கூர்ந்த நகங்களால்....

காலாதி காலங்களாய்
தொடர்ந்த மெளனம்
களைந்தெறிந்து
ஊழியின் உருவமாய்
மெய் சிவந்து நின்றேன்
எதிர்கொள்ளவியலாது
சிறகின் தூவிகள் பொசுங்க
ரத்தமும் மாம்சமும் கருக
வெந்தொழிந்தது.....

நன்றி : திண்ணை

Monday, May 2, 2011

பிரியம் சுமக்கும் சொற்களால்..... (பகுதி2)



பிரியம் சுமக்கும் சொற்கள்

கொண்டு உனக்காய்

வடிப்பேன் ஒரு கவிதை....

மெளனக்கிடங்கில் மறைக்கப்பட்ட

மனதின் மென்மைகளை

அதில் பொதித்து

நீ அண்மிக்கையில்

பரிசளிப்பேன்

வெட்கம் குமிழ் குமிழாய்

உடைத்தபடி......

உன் நயன பாஷைகள் கண்டு

அந்தரங்கத்தில் மலரும்

சித்திரங்களின் மொழி

நானறிவேன்.....

மென்று விழுங்கும்

பார்வையுடன் நீ

என் முன் நிற்க

எல்லாம் புரிந்தும்

ஏதுமறியாச் சிறுமியாய்

நான் நிற்பேன்....

மறுதலிக்கப்படும் அன்பின் வலி

என்றும் நான் உணராதிருக்கவேண்டும்

என பிரார்த்தித்துக்கொண்டே.....


நன்றி : திண்ணை

Monday, April 4, 2011

பிரியம் பொதிந்த சொற்களால்......


நித்திலப்புன்னகை சுடர் வீசிட
எனை நித்தமும் கொஞ்சிடும்
சித்திரப்பூவே.....


கருத்தொருமித்த காதலின்
பரிசாய் என் கருவறையில்
கனிந்திட்ட கனியமுதே....

நின் முகத்தினெழிலிங்கு இயம்பிட
முயன்று முத்தமிழும் தோற்றிட்ட
அற்றைய பொழுதில் அகமகிழ்ந்தேன்.....

மெல்லிதழாலும் பூங்கரத்தாலும்
இன்பப்பொழினிடையில்
உயிரினமுதம் பொழிகையில்
என் சிந்தை திறை கொடுத்தேன்....

என் புலன் வருத்தி இப்புவியில்
நீ பாதம் பதித்த இந்நாளில்
நமையாளும் ஈசனிடம்
நலம் பல உனை சார்ந்திட
நல்லருள் செய வேண்டுகிறேன்....

இன்று என் இளைய மகன் கார்த்திகேயனின் பிறந்த நாள்
வாழ்த்துங்கள் நண்பர்களே ........

Wednesday, March 9, 2011

நீளும் இகற்போர்...


.

சிநேகத்தின் வேர்கள்
கருகுவதை கண்டு
உயிர்ப்பின் தாளலயம்
ஸ்வரம் தப்பிடும்...

நிகழ்கால நிஜத்திற்கும்
இறந்தகால நிழலிற்கும்
நடுவே மனம்
வெகுவாய் அலைப்புறும்....

பொய் என தெரிந்தும்
மெய் அன்பின் வாசனையை
விரும்பும்....

இனம்புரியா ஏதோ ஒரு
உணர்விழைநெய்யப்படுவதும்
நெய்யப்பட்டஅம்மாயத்திரை
சிதறடிக்கபடுவதுமாய்
நீளும் இகற்போரில்
என் நெஞ்சம் துவளும்...

Monday, February 7, 2011

தனிமையில் அழல்.....


இது காறும் என் உலகில்
இது போன்ற நிகழ்வுகளே அதிகம்....

என் அன்பு அற்பமாகவும்
என் அக்கறை அவமதிப்பாகவும்
என் நேசம் வேஷமாகவும்
என் பாசம் பைத்தியக்காரத்தனமாகவும்....
என் கருத்துகள் கர்வத்தின் வெளிப்பாடாகவும்
உங்களுக்கு தோன்றிடலாம்....

அவரவர் உலகம்
அவரவர்க்கான கோணங்களில்
அவரவர்க்காய்......

உங்களுக்கான பாதையில்
உங்களின் நடையை
நான் எப்போதும்
தடுக்கப்போவதேயில்லை.....

என் வீட்டு தோட்டத்தில்
என் கரம் பிடித்து நடக்க
காத்திருக்கும் இரு சிறு
வண்ண மலர்களின்
ஸ்பரிசம் போதும் எனக்கு
விட்டுவிடுங்கள் தயை கூர்ந்து
விலகிச்செல்லுங்கள்.......

Thursday, December 23, 2010

மிருகம் ஒன்று ( இரண்டாம் பாகம்)


நான் நேசித்து வந்த
மிருகமொன்று
யாசித்து வந்தது
யோசித்து சொல்வதாய்
பேசித்து அனுப்பி
தவிர்த்திருக்க....

தனித்திருந்து
தனித்திருந்து
பசித்திருந்த
அம்மிருகம்
மென் தசைகளும்
குருத்தெலும்புகளும்
நொறுக்கி
மெதுவாய் எனை வென்றது
பின்னொரு நாளில் கொன்றது!!!

Tuesday, December 14, 2010

கரைந்த நிழல்.....


தூக்கம் வேர்பிடிக்காத் தருணமொன்றில்
தனிமையின் சாளரத்தில் வீற்றிருந்தேன்
அந்தியெங்கும் சாம்பல் வர்ணோவியம்
கோட்டுச்சித்திரமாய்.....

சிலந்தி வலை பின்னலாய்
தொடரும் சிந்தனைகள்.....

எங்கோ ஒரு ஒலம் கேட்க
மனம் பதைத்து வெகுதூரம்
தேடியலைந்தேன்.....

பின் இலை பெய்து முடித்த
மரமொன்றின் கீழ் நின்று
என் நிழல் நோக்க அது
விம்மிக்கொண்டே கரைந்தழிந்தது.....

எனக்கு நானே துணையில்லை
என்பதை உணர்ந்து மனம் பதைக்க
இலக்கற்று நடக்கத்தொடங்கினேன்.....

Wednesday, December 8, 2010

பேசும் பொற்சித்திரமே!!!!


கன்னத்தோடு கன்னமிழைத்து
முத்தம் நூறு தந்துவிடு
கண்ணிமை வருடலில்
கவலையெல்லாம் தீர்த்துவிடு....

முந்தானை போர்வைக்குள்
முகம் போர்த்து
பூ விழி வருடலில்
என் மனம் சாய்த்து
என் உதிரம் சுவைத்து வளர்ந்த
பிள்ளைக்கனி அமுதே
பேசும் பொற்சித்திரமே...

உன் பிஞ்சு பால் சதையை
அள்ளியெடுத்து
கொஞ்சி மகிழ்கையில்
உளம் களித்திருப்பேன்
எதிர் வரும் இன்னல் யாவும்
எதிர்த்து நான் நிற்பேன்........




Monday, December 6, 2010

பிரிய தோழி தீபாவிற்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்!!!



பள்ளி தோழி அவள்...
என் பால்யத்தில் பாதி அவள்...
பாசமிகு சிநேகிதியாய்...
பதின்ம வயதில் என் காதலியாய்...


பசுமரத்தணியாய்
பதிந்திருக்கும்
சிநேகத்துடன்
கரம் கோர்த்து அவளுடன்
சுற்றி திரிந்த நாட்கள்


இன்று பாரதத்தின் ஏதோ ஒரு
மூலையில் நீயும்....
மற்றொரு மூலையில் நானும்....

உன் குடும்பத்தாரின்
அன்பு வலையில்
அகப்பட்டுக்கொண்டிருக்கும்
என் பிரிய சிநேகிதியே....

இன்று பிறந்த நாள் காணும்
நீ என்றும் நலமே வாழ
வாழ்த்தும்
உன் அன்பு தமிழ்....

I MISS YOU A LOT MY DEAR.....

Tuesday, November 16, 2010

எனக்கான கவசங்கள்....


எனக்கான கவசங்களுடன்
பிரசவிக்கப்பட்டிருக்கின்றேன்.....

உளைகிற மனம்
உள்ளே அழுதாலும்
வெளியே முகம் மலர்த்தும்
கலையை உங்களுக்காய் வளர்த்திருக்கிறேன்.....

எமை நொறுங்கச் செய்து
நெஞ்சில் நெறி கட்டி
கொண்டவை எவரிடத்தும்
பகிரப்படாது என்னுள்
புதையுண்டிருக்கும்.....

காலத்தின் சுழற்சியில்
கட்டுக்கள் கழன்றிட
சுதந்திர வானில்
சிறகசைப்பேன் வான்தொட்டு.....

என் மீள்வருகைக்காய்
நீங்கள் தவமிருக்கும் நாட்களை
மனத்திரையில் கண்டு களித்திட்டு.....

Thursday, November 11, 2010

கலியுகபுருஷனும் பிரம்மராட்சதனும்.....


காதல் கொண்டு
கரம் பிடிப்பான்
கருத்தொருமிக்கவில்லையெனில்
கழட்டிவிட்டுச் செல்லும்
கலியுகபுருஷனும்....

தன் தேவை முடிந்ததும்
பெண் (பிள்ளை) தேவையில்லை என
கருவறையை
கல்லறையாக்குபவனும்....

பத்து வயது குட்டி பெண்ணோ
பருவத்து சுட்டி பெண்ணோ
பத்தினியோ
பரத்தையோ
கொன்றழித்து தின்றொழி
காமப்பசிக்கு
குற்றமொன்றுமில்லை எனும்
நவீன சாத்தான்களும்....

பெண்ணின் பிணத்தை கூட
புணரும் பேராண்மை
படைத்த
பிரம்மராட்சதர்களும்
உலவும் பூமியில்....
பெண்ணாய் பிறப்பெடுத்தற்கே
பெரும்பாவம் செய்திருத்தல் வேண்டும்.....

Tuesday, November 9, 2010

வீசும் தூறலிடை....


மண்ணை முத்தமிட்டு
துள்ளிகுதித்து தாளலயத்துடன்
சங்கீதம் கற்றுக்கொடுக்கும்
வெள்ளிமலர்த்தூவல்...

வீசும் தூறலிடை
மழை நூலில் கோர்த்த
நீர்ப்பூக்கள் நம்மேல் விழ....

மழையின் சீண்டலுக்கு ஒளிந்து
நாம் மரத்தடியில் ஒதுங்க.....

நீள்விசும்பினிடை நீந்தும்
நிலவும் நட்சத்திரங்களும்
நமை கண்டு நகைக்க.....

அரும்புகள் கண்சிமிட்ட
இலைகளெல்லாம்
வீழ்கின்றன அடுத்தடுத்து.....

கண்களில் நேசம் கொண்டு
நீ எனை பருகும் இக்கணத்தில்
மெளனத்தின் பொருட்டு
இதழ் மூடியிருப்பின்
இம்மழைக்காலத்தின்
மாலைப்பொழுதில்
தப்பித்துக்கொள்வேன்
உன்னிடமிருந்து...









Saturday, October 30, 2010

காவியுடைக் கள்வர்கள்


அண்ட சராசரங்கள் எம்

ஆளுகைக்கு கீழ் என்பன் தமை

அண்டி நிற்போர்க்கு

ஆனந்தமே எல்லை என்பன்.....

சிந்தாந்த செதுக்கல்களை நம்

சிந்தைக்கு தெளித்திட்டு

சிற்றின்பத்தில் மூழ்கும்

அற்பப் பதர்கள் இவர்கள்.....

கஞ்சாவும் கொகேயினும் முகர்ந்து

பிரம்மத்தை அறிந்ததாய்

பினாத்திடும் பித்தர்கள்.....

களைந்தொழிக்கவேண்டும்

கபால விழிகளில் மிகுந்திருக்கும்

காமத்தை அறியா கன்னியருக்கு

களவியல் பாடத்தை

கற்பிக்கும்

கள்ளவிஷக்காளான்களை

கயமையில் திளைத்திடும்

காவியுடைக்கள்வர்களை.....

Tuesday, October 26, 2010

குருதி வேட்கை .... ( நன்றி கீற்று )




எனை ஒரு வளர்ப்பு
மிருகமாகவே
கருதுகின்றனர்.....


நில் என்றால் நிற்பதற்கும்
செல் என்றால் செல்வதற்கும்
கட்டளைகளுக்கு அடிபணியவும்
கட்டுப்பாடுகளுக்கும் பழக்குகின்றனர்
ஆழ்ந்த சினேகத்தின் நகைப்போடு.....


என் சுயத்தை
அவர்கள் வெறுக்கின்றனர்....


அவர்கள்
அறிவதாயில்லை
என்னுள்ளும்
கோரைப்பற்களும்
கூர் நகங்களும்
குருதி வேட்கையுடனிருப்பதை....


Tuesday, October 19, 2010

விழிப்பிளவுள் சரிந்தவள்!!!!


உன் விழிப்பிளவுள்
வழுவிச் சரிந்தவளை
விலகவிடாதே
இறுக அணைத்துக்கொள்
இடைவெளி அதிகம் வேண்டாம்.....

கழுத்து வளைவில் முகம் புதைத்து
காதோரம் மெல்ல கிசுகிசுத்து
காதலை மெல்லச் சொல்
எனை கொல்லாமல் கொல்....

இருளின் நிறத்தில் ஒளிர்கின்ற
மீசையின் ஒற்றைமுடி
ஸ்பரிசத்தில் நான் கிளர்ந்தெழ
முத்தங்களால் கன்னக்குழியை நிரப்பி
சுவாசப்பையை சலம்பி திரியவை....

மெளனங்களும் மறுகல்களும்
குழைவுகளும் சினுங்கலுமாய்
பேரானந்த களிப்பில் உன்
உள்ளங்கை வெப்பத்தில்
நான் உருகும் இக்கணத்தில்
நிகழட்டும் என் மீள்பிறப்பு.....

Tuesday, October 12, 2010

கருப்பையின் வலி....


எண்ணற்ற விரதங்கள்
பரிந்துரைக்கப்படும்
பிள்ளையற்றவளுக்காய்....

எண்ணிலடங்கா
இன்னல் தரும் பட்டங்கள்
இலவசமாய் வழங்கப்பட்டு
இதயத்தின் அடியாழம் வரை
ரணப்படுத்தப்படும்....

வித்தியாசமான வைத்தியங்கள் தரும்
விதவிதமான வாதைகளை விட
வார்த்தையம்புகள்
வலிக்கத்தைக்கும்....

வாராது வந்த மாமணியே
என் மணி வயிற்றின் தாழ் திறப்பது
எப்போது என
ஏக்கங்களை சுமந்து
காத்திருப்பவளுக்கு மட்டுமே தெரியும்
காத்திருத்தலின் வலியும்
காலியாய் கிடக்கும் கருப்பையின் வலியும்....



Monday, October 4, 2010

நெருப்பு குளியல்....


முகமறியாத போதும்
எனை முன்னிறுத்தி.....

பொய் வார்த்தைகளாலும்
நயவஞ்சகங்களாலும்
ஓயாத துரோகங்களாலும் நிறைக்கப்பட்ட
அழுகிய புன்னகையின் துர்நாற்றம்
கண்ணுறுகையில்.....

அடிபட்டு ஓலமிட்டு பின் அடங்கும்
மனம் அதனிடம் சப்திப்பதற்கு
மொழியின்றி ஸ்தம்பிக்கிறேன்....

பனிப்புற்களில் பாதம் பதித்து
ஏறுவெயிலில் நான் நடக்க
கசியும் மோனவெளியில்
கதிரவனின் வெளிச்சத்தில்
நிழல் அழிவதை
கண்டு துக்கம் பீறிட
மரத்திடும் நெருப்புக் குளியல்.....
-----------------------------------------------------------