பதுங்கு குழியில் பதுங்கிடவும்
நண்பர்களின் சடலங்களை நாய் நரிகள்
பங்கிடுவதை பார்த்திடவும்
மழலைகளின் மரணங்களை கண்டு
மனம் தளராதிருக்கவும்
கற்பு நெறிகள் கயவர்களால்
காற்றில் கரைவதைகண்டும்
செம்புனல் கண்டு சிதறாமலும்
வன்கொடுமை கண்டு வளையாமலும்
இருக்க வல்லமை தாராயோ!!!!!!!
யுத்த பூமி
பிறப்பதும் வளர்வதும் பின்னர் மூப்புவந்துஇறப்பதும் வையத்து வாழ்வு
பிறப்பதே இறப்பதற்கு என்பது என்ன வாழ்வு
முழவொலி விழவொலி மென்சிறார் மழவொலி
பாட்டொலி உழவொலி இங்கு இல்லை
மறலி கண்டு கதறிய மரணஒலி மட்டும் இஙகு உண்டு
புத்தனின் வழியில் வந்தவன் எங்கள் ரத்ததில் குளிக்கிறான்
இங்கு நதிகள் எங்கள் உதிரத்தால் சிகப்பானது
இங்கு மரங்களுக்கு எங்கள் பிணங்கள் உரமானது
இது யுத்த பூமி எங்கேடா சாமி???
கரியும் வைரமாகும்
கூழாங்கல் கரியை கண்டதுகர்வத்தில் சிரித்தது
கரி தன்னை பூமியில் புதைத்தது
காலத்தின் கோலம் கரிகட்டையாய் நாம்
பூமிக்குள் புதையும் என் இனம்
யுகங்கள் கழியும்
மண்ணில் புதைந்த மக்களும்
கரியும் வைரம் ஆகும்
இறைமை கரி கட்டையின் பொறுமைக்கு
அதை வைரம் ஆக்கும்
ஆனால் கூழாங்கலே
எங்கள் கால்களில் மிதி படத்தான் போகிறாய்
எம்மை கண்டு எள்ளி நகை ஆடும்
அனைவருக்கும் இது பொருந்தும்
நிறுத்துங்கள் தோழர்களே
உதித்திடும் செங்கதிரோன் எங்கள்உள்ளத்து துயர் துடைப்பான் என எண்ணினோம்
அருணனும் எங்கள் நிலை கண்டு அழுதிடும்
பரிதியும் எங்கள் நிலை கண்டு பதறிடும் என நம்பினோம்
ஆழி அழித்தது ஆள்பவனும் அழிக்கிறான்
அண்டைய நாடும் சேர்ந்து அழிக்கும்
ஆதரவு கேட்டால் அவரவர் உடலை தீயில் இடுகின்றனர்
இங்கு நாங்கள் எரிவது போதாதா?? அங்குமா எரிவது???
போதும் சகோதரா நிறுத்து உன் தீக்குளிப்பை
இதுவல்ல நாங்கள் உம்மிடம் கேட்பது
பி.கு : நான் பதிவுலகத்திற்கு வந்த புதிதில் என் மக்களுக்காக ஆதங்கத்துடன் எழுதிய கவிகளில் சில உங்கள் பார்வைக்கு சிலர் உங்களின் பழைய பதிவுகளை தவற விட்டுவிட்டோம் என கேட்டுக்கொண்டதற்க்காக மீண்டும் என் மற்றொரு வலைதளத்தில் இருந்த கவிதையை இங்கு பதிவிடுகிறேன்......