Monday, February 7, 2011

தனிமையில் அழல்.....


இது காறும் என் உலகில்
இது போன்ற நிகழ்வுகளே அதிகம்....

என் அன்பு அற்பமாகவும்
என் அக்கறை அவமதிப்பாகவும்
என் நேசம் வேஷமாகவும்
என் பாசம் பைத்தியக்காரத்தனமாகவும்....
என் கருத்துகள் கர்வத்தின் வெளிப்பாடாகவும்
உங்களுக்கு தோன்றிடலாம்....

அவரவர் உலகம்
அவரவர்க்கான கோணங்களில்
அவரவர்க்காய்......

உங்களுக்கான பாதையில்
உங்களின் நடையை
நான் எப்போதும்
தடுக்கப்போவதேயில்லை.....

என் வீட்டு தோட்டத்தில்
என் கரம் பிடித்து நடக்க
காத்திருக்கும் இரு சிறு
வண்ண மலர்களின்
ஸ்பரிசம் போதும் எனக்கு
விட்டுவிடுங்கள் தயை கூர்ந்து
விலகிச்செல்லுங்கள்.......

Thursday, December 23, 2010

மிருகம் ஒன்று ( இரண்டாம் பாகம்)


நான் நேசித்து வந்த
மிருகமொன்று
யாசித்து வந்தது
யோசித்து சொல்வதாய்
பேசித்து அனுப்பி
தவிர்த்திருக்க....

தனித்திருந்து
தனித்திருந்து
பசித்திருந்த
அம்மிருகம்
மென் தசைகளும்
குருத்தெலும்புகளும்
நொறுக்கி
மெதுவாய் எனை வென்றது
பின்னொரு நாளில் கொன்றது!!!

Tuesday, December 14, 2010

கரைந்த நிழல்.....


தூக்கம் வேர்பிடிக்காத் தருணமொன்றில்
தனிமையின் சாளரத்தில் வீற்றிருந்தேன்
அந்தியெங்கும் சாம்பல் வர்ணோவியம்
கோட்டுச்சித்திரமாய்.....

சிலந்தி வலை பின்னலாய்
தொடரும் சிந்தனைகள்.....

எங்கோ ஒரு ஒலம் கேட்க
மனம் பதைத்து வெகுதூரம்
தேடியலைந்தேன்.....

பின் இலை பெய்து முடித்த
மரமொன்றின் கீழ் நின்று
என் நிழல் நோக்க அது
விம்மிக்கொண்டே கரைந்தழிந்தது.....

எனக்கு நானே துணையில்லை
என்பதை உணர்ந்து மனம் பதைக்க
இலக்கற்று நடக்கத்தொடங்கினேன்.....

Wednesday, December 8, 2010

பேசும் பொற்சித்திரமே!!!!


கன்னத்தோடு கன்னமிழைத்து
முத்தம் நூறு தந்துவிடு
கண்ணிமை வருடலில்
கவலையெல்லாம் தீர்த்துவிடு....

முந்தானை போர்வைக்குள்
முகம் போர்த்து
பூ விழி வருடலில்
என் மனம் சாய்த்து
என் உதிரம் சுவைத்து வளர்ந்த
பிள்ளைக்கனி அமுதே
பேசும் பொற்சித்திரமே...

உன் பிஞ்சு பால் சதையை
அள்ளியெடுத்து
கொஞ்சி மகிழ்கையில்
உளம் களித்திருப்பேன்
எதிர் வரும் இன்னல் யாவும்
எதிர்த்து நான் நிற்பேன்........




Monday, December 6, 2010

பிரிய தோழி தீபாவிற்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்!!!



பள்ளி தோழி அவள்...
என் பால்யத்தில் பாதி அவள்...
பாசமிகு சிநேகிதியாய்...
பதின்ம வயதில் என் காதலியாய்...


பசுமரத்தணியாய்
பதிந்திருக்கும்
சிநேகத்துடன்
கரம் கோர்த்து அவளுடன்
சுற்றி திரிந்த நாட்கள்


இன்று பாரதத்தின் ஏதோ ஒரு
மூலையில் நீயும்....
மற்றொரு மூலையில் நானும்....

உன் குடும்பத்தாரின்
அன்பு வலையில்
அகப்பட்டுக்கொண்டிருக்கும்
என் பிரிய சிநேகிதியே....

இன்று பிறந்த நாள் காணும்
நீ என்றும் நலமே வாழ
வாழ்த்தும்
உன் அன்பு தமிழ்....

I MISS YOU A LOT MY DEAR.....

Tuesday, November 16, 2010

எனக்கான கவசங்கள்....


எனக்கான கவசங்களுடன்
பிரசவிக்கப்பட்டிருக்கின்றேன்.....

உளைகிற மனம்
உள்ளே அழுதாலும்
வெளியே முகம் மலர்த்தும்
கலையை உங்களுக்காய் வளர்த்திருக்கிறேன்.....

எமை நொறுங்கச் செய்து
நெஞ்சில் நெறி கட்டி
கொண்டவை எவரிடத்தும்
பகிரப்படாது என்னுள்
புதையுண்டிருக்கும்.....

காலத்தின் சுழற்சியில்
கட்டுக்கள் கழன்றிட
சுதந்திர வானில்
சிறகசைப்பேன் வான்தொட்டு.....

என் மீள்வருகைக்காய்
நீங்கள் தவமிருக்கும் நாட்களை
மனத்திரையில் கண்டு களித்திட்டு.....

Thursday, November 11, 2010

கலியுகபுருஷனும் பிரம்மராட்சதனும்.....


காதல் கொண்டு
கரம் பிடிப்பான்
கருத்தொருமிக்கவில்லையெனில்
கழட்டிவிட்டுச் செல்லும்
கலியுகபுருஷனும்....

தன் தேவை முடிந்ததும்
பெண் (பிள்ளை) தேவையில்லை என
கருவறையை
கல்லறையாக்குபவனும்....

பத்து வயது குட்டி பெண்ணோ
பருவத்து சுட்டி பெண்ணோ
பத்தினியோ
பரத்தையோ
கொன்றழித்து தின்றொழி
காமப்பசிக்கு
குற்றமொன்றுமில்லை எனும்
நவீன சாத்தான்களும்....

பெண்ணின் பிணத்தை கூட
புணரும் பேராண்மை
படைத்த
பிரம்மராட்சதர்களும்
உலவும் பூமியில்....
பெண்ணாய் பிறப்பெடுத்தற்கே
பெரும்பாவம் செய்திருத்தல் வேண்டும்.....